திருத்தங்கல் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


திருத்தங்கல் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு, கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 Sep 2018 10:45 PM GMT (Updated: 17 Sep 2018 7:29 PM GMT)

திருத்தங்கல் அருகே திருப்பதி நகரில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி வழங்க கூடாது என கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

திருத்தங்கல் அருகே செங்கமலநாச்சியார் புரம் பஞ்சாயத்திற்குட்பட்ட திருப்பதி நகரில் டாஸ்மாக் கடை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது இப்பகுதியில் அருந்ததியர் சமுதாயம் உள்ளிட்ட பல்வேறு சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறோம் மேலும் இப்பகுதியில் உள்ள தீப்பெட்டி மற்றும் இதர தொழில் நிறுவனங்களில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அருகில் அய்யனார் கோவிலும் உள்ளது.

எனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். இதற்கு முன்பு இப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை கலெக்டரின் உத்தரவுப்படி மூடப்பட்டது. எனவே மீண்டும் இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதிக்ககூடாது. இது தொடர்பாக கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையும் மீறி டாஸ்மாக் கடை திறந்தால் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

சிவகாசி அருகே உள்ள எறவார்பட்டி கிராமத்தில் வசிக்கும் அருந்ததியர் சமுதாய மக்கள் தங்கள் பகுதிக்கு சாலை வசதி மற்றும் மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

இதே போன்று ராஜபாளையம் யூனியன் மூக்கர்நத்தம் கிராமத்தை சேர்ந்த அருந்ததியர் சமுதாய மக்கள் தங்களுக்கு கடந்த 6 மாதங்களாக குடிநீர் வினியோகம் கிடைக்கவில்லை எனவும் தங்கள் பகுதிக்கு மேல்நிலை தொட்டியில் இருந்து தனி குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மம்சாபுரம் அருகே உள்ள நரையங்குளம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நலனுக்கு எதிராக பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் சில ஆசிரியர்கள் செயல்படுவதாக கல்வித்துறை அதிகாரிகளிடம் கிராம மக்கள்சார்பில் கொடுக்கப்பட்ட மனு மீது விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகள் வந்த போது தலைமை ஆசிரியை வெளி நபர்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தியதாக அவர் மீதும் அவருக்கு ஆதரவாக உள்ளவர்கள் மீதும் நடவடிக்க எடுக்க கோரி நரையங்குளம் நேச்சுரல் பாய்ஸ் நற்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் லிங்கமுத்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.


Next Story