விருதுநகரில் பயங்கரம்: பழிக்குப்பழியாக தொழிலாளி கொலை
விருதுநகரில் கொலைவழக்கில் ஜாமீனில் வந்த கட்டிட தொழிலாளியை பழிக்குப்பழியாக வெட்டிக் கொலை செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாத்திநாயக்கன்பட்டி ரோட்டை சேர்ந்தவர் சங்கரேஸ்வரன்(வயது 47). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.சி.ஏ. காலனியை சேர்ந்த முத்துகாமாட்சி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் மாத்திநாயக்கன்பட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அவரை சுற்றிவளைத்தனர். அவர் சுதாரிப்பதற்குள் அரிவாளால் வெட்டிச்சாய்த்து விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் சங்கரேஸ்வரன் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக கொலையுண்ட சங்கரேஸ்வரனின் சகோதரர் சுடலைமாடசாமி விருதுநகர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், முத்துகாமாட்சி கொலைக்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து போலீசார் முத்துகாமாட்சியின் சகோதரர்கள் விக்கி என்ற விக்னேஷ், சேர்மராஜ் மற்றும் அல்லம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார், மாத்திநாயக்கன்பட்டி ரோட்டை சேர்ந்த கீர்த்தீஸ்வரன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.