சாராயம் கடத்தல்; 2 பேர் கைது: மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்


சாராயம் கடத்தல்; 2 பேர் கைது: மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Sept 2018 3:30 AM IST (Updated: 18 Sept 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே சாராயம் கடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். சாராயம் கடத்தி வர பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குத்தாலம், 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கொங்கானோடை கிராமத்தில் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் மோட்டார்சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரை வழிமறித்து மோட்டார்சைக்கிளில் இருந்த சாக்கு மூட்டையை போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த பிளாஸ்டிக் கேனில் சாராயம் இருந்ததும், அந்த சாராயத்தை அவர் காரைக்காலில் இருந்து மோட்டார்சைக்கிளில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் சீர்காழி அருகே உள்ள அரசூர் பாலாஜி நகரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ் (வயது23) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம், அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் கொங்கானோடை கிராமத்தில் மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த செம்பனார்கோவில் அருகே உள்ள சாத்தனூரை சேர்ந்த அன்பழகன் (42) என்பவரையும் பெரம்பூர் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

Next Story