குன்னூர் டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
குன்னூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.
குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளிலும், கோவை மாவட்டம் வால்பாறையிலும் அரசு தேயிலை தோட்டக்கழகத்துக்கு(டேன்டீ) சொந்தமான தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் குன்னூரில் செயல்பட்டு வருகிறது. டேன்டீ தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 7–ந் தேதி சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக மேற்குறிப்பிட்ட தேதியில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் அச்சுறுத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை, மருத்துவ விடுப்பு தரப்படுவதில்லை என்றும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில் மாதந்தோறும் 7–ந் தேதி முறையாக சம்பளம் வழங்க வேண்டும், பணிக்கொடை போன்ற சலுகைகளை பெற்றுத்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோசலிச தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் குன்னூரில் டேன்டீ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு சங்க தலைவர் கரு.வெற்றிவேல் தலைமை தாங்கினார். அதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து தொழிலாளர்களிடம், டேன்டீ நிர்வாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர். டேன்டீ அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.