கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலி


கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் புகுந்து நாயை கவ்விச்சென்ற சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 18 Sept 2018 4:00 AM IST (Updated: 18 Sept 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே குடியிருப்புக்குள் சிறுத்தைப்புலி புகுந்து நாயை கவ்விச்சென்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பகுதியை சேர்ந்தவர் சாமியப்பன். தமிழக நெடுஞ்சாலைத்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டு வளாகத்தில் நாயை கட்டி வைத்துவிட்டு, சாமியப்பன் தூங்க சென்றார். இரவு 10 மணியளவில் திடீரென நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே சாமியப்பன் வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்புறத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த ஒரு சிறுத்தைப்புலி, நாயை கவ்விச்சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் அரை மணி நேர இடைவெளிக்கு பிறகு வீட்டிற்கு அருகில் கரடி ஒன்று உலா வந்ததும் தெரியவந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சாமியப்பன், வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர். குடியிருப்புக்குள் புகுந்து நாயை, சிறுத்தைப்புலி கவ்விச்சென்ற தகவல் அறிந்து அரவேனு பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

கடந்த சில மாதங்களாக அரவேனு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தைப்புலி மற்றும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அதிகாலை நேரத்தில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வரும் தொழிலாளர்கள் வனவிலங்குகள் தாக்கி விடுமோ? என்ற அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களை அழித்து 200–க்கும் மேற்பட்ட சொகுசு பங்களா மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளன. இவ்வாறு வனவிலங்குகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால், அவை அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. எனவே வனவிலங்குகளின் வழித்தடங்கள் அழியாமலும், அவை குடியிருப்பு பகுதிக்குள் புகாமலும் இருக்க வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story