வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்


வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Sept 2018 3:00 AM IST (Updated: 18 Sept 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே வடபுதுப்பட்டியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தேனி,


தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட் கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சுகுணா தலைமையில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் வடபுதுப்பட்டிக்கு விரைந்து சென்றனர். அங்கு அழகர்சாமி என்பவருடைய வீட்டை சோதனை போட முயன்றனர். அப்போது அந்த வீடு பூட்டிக் கிடந்தது. அருகில் மற்றொரு பகுதியில் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் அழகர்சாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீட்டை வேறொரு நபருக்கு வாடகைக்கு விட்டுள்ளதாகவும் வீட்டின் சாவி அந்த நபரிடமே உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் வாடகைக்கு எடுத்தவர் அங்கு வரவில்லை என்பதால் இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் லட்சுமி தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனையிட்டனர். அப்போது அந்த வீட்டுக்குள் பண்டல் பண்டலாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சுமார் 480 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கு புகையிலை பொருட் களை பதுக்கி வைத்த நபர் குறித்தும் இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story