லாரி மீது கார் மோதல்; கட்டிட மேஸ்திரி பலி; 5 பேர் படுகாயம்


லாரி மீது கார் மோதல்; கட்டிட மேஸ்திரி பலி; 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Sep 2018 9:45 PM GMT (Updated: 17 Sep 2018 10:08 PM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதியதில் கட்டிட மேஸ்திரி பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை, 


பெரம்பலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன்(வயது 56). கட்டிட மேஸ்திரி. இவர் தனது மனைவி சாந்தி(50), மகன்கள் சத்யபிரகாஷ்(27), மதியழகன்(23), சத்யபிரகாஷ் மனைவி பிரபா(21), சாந்தியின் அக்காள் ராணி(54) ஆகியோருடன் சென்னையில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினரை பார்ப்பதற்காக சென்றார். பின்னர் உறவினரை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு அதே காரில் அனைவரும் ஊருக்கு திரும்பினர். காரை சத்யபிரகாஷ் ஓட்டினார்.

இவர்களது கார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சித்தானங்கூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை அதன் டிரைவர் திடீரென ‘பிரேக்’ போட்டு நிறுத்தினார். இதனால் எதிர்பாராதவிதமாக லாரி மீது சத்யபிரகாஷ் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இதற்கிடையே லாரியை அதன் டிரைவர் அங்கிருந்து ஓட்டிச்சென்று விட்டார்.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நடராஜன் உள்ளிட்ட 6 பேரும் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். சத்யபிரகாஷ் உள்ளிட்ட 5 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்துக்கு காரணமான லாரி, சேலம் நோக்கி சென்று கொண்டிருப்பதாக எலவனாசூர்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக் கப்பட்டது. இதையடுத்து போலீசார் உளுந்தூர்பேட்டை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியை மடக் கிப்பிடித்து பறிமுதல் செய்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து டிரைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த விபத்து குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story