மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 Sept 2018 4:45 AM IST (Updated: 18 Sept 2018 3:56 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரம், ஆரணி ரோட்டை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், அரிசி வியாபாரி. இவரது மனைவி கண்ணாமணி (வயது 62). இவர், தனது வீட்டின் முன்பகுதியில் தனியாக வசித்து வந்தார். பின் பகுதியில் உள்ள வீட்டில் அவருடைய மகன் குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் 14 வீடுகளை கண்ணாமணி வாடகைக்கு விட்டு உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ந் தேதி நீண்ட நேரமாகியும் கண்ணாமணி வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குமார், கண்ணாமணியின் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது கட்டிலில் படுத்திருந்த கண்ணாமணி கீழே விழுந்து கிடந்தார். அவருடைய முகத்தில் தலையணை கிடந்து உள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த குமார் தலையணையை தூக்கி பார்த்தபோது கண்ணாமணி இறந்துகிடந்தார். மேலும் அவரது கழுத்து, கை, கால் ஆகிய பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்தது. அவர் அணிந்திருந்த செயின், கம்மல், வளையல் உள்பட 15 பவுன் நகையையும் காணவில்லை. கண்ணாமணியை மர்ம நபர்கள் தலையணையால் அமுக்கி கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து குமார் வந்தவாசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கண்ணாமணி வாடகைக்கு விட்ட வீடுகளில் ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த செய்யாறு தாலுகா மேல்மட்டை விண்ணமங்கலம் அருந்ததியர் பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலாளி விஜயக்குமார் என்பவர் அந்த பகுதியில் சுற்றி திரிந்ததாக அவரை பார்த்தவர்கள் போலீசில் தெரிவித்தனர்.

இதையடுத்து விஜயக்குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், கண்ணாமணியை கொலை செய்து, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து விஜயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் அர்ச்சனா ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நடராஜன், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றத்திற்கு விஜயக்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து விஜயக்குமாரை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story