கோட்டாட்சியரை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி
பாசன வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற கோட்டாட்சியரை உயிரோடு எரித்த கொல்ல முயன்ற சம்பவம் சேத்தியாத்தோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குறுக்குரோடு பகுதியில் குமாரஉடைப்பு பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் மற்றும் அதன் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி இருந்தார். இதை அகற்ற கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வந்தது. இதில் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டதன் பேரில், சிதம்பரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் சேத்தியாத்தோப்பு குறுக்குரோடு பகுதிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நேற்று காலை 6 மணிக்கு சென்றனர்.
அப்போது அங்கு கட்டிட உரிமையாளர் மற்றும் அவரது ஆதரவாளர்களான 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு திரண்டு வந்து, பொக்லைன் எந்திரத்தின் முன்னால் அமர்ந்து போராட்டம் செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், அங்கிருந்தவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.
இதையடுத்து, ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிப்பதற்காக அந்த பகுதிக்குள் அதிகாரிகள் செல்ல முயன்றனர். அப்போது அங்கிருந்தவர்கள், கட்டிடங்களை இடித்தால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கோஷமிட்டனர். இதற்கிடையே 10-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உடலில் மண்எண்ணெய், டீசல் போன்றவற்றை ஊற்றிக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இருப்பினும் அதிகாரிகள் முன்னோக்கி சென்றனர். அப்போது, கோட்டாட்சியர் ராஜேந்திரன் மீதும் டீசல் மற்றும் மண்எண்ணெய் விழுந்தது. இதனால், பதற்றமான அதிகாரிகள், கோட்டாட்சியருக்கு ஏதேனும் நேர்ந்து விடுமோ என்கிற அச்சத்தில், அவரை அங்கிருந்து பத்திரமாக மீட்டு, அழைத்து வந்து விட்டனர்.
காலை 6 மணி முதல் 10 மணி வரைக்கும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிக்குள் அதிகாரிகளால் செல்ல முடியவில்லை. ஏற்கனவே போலீசாருக்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற இருப்பதாகவும், போதிய பாதுகாப்பு ஏற்பாடு வழங்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறையினர் சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புக்காக 2 போலீசார் மட்டுமே வந்திருந்தனர். இதனால் தான் அதிகாரிகளால், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடந்த பிரச்சினை குறித்து, கோட்டாட்சியர் ராஜேந்திரன் செல்போன் மூலம், கலெக்டர் அன்புசெல்வனுக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து சேத்தியாத்தோப்பு போலீசில் கோட்டாட்சியர் ராஜேந்திரன் புகார் செய்தார். அதில், ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற என்னையும், மற்ற அதிகாரிகளையும் பணிகளை செய்ய விடாமல் ஆக்கிரமிப்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர்.
அவர்களில் சிலர் டீசல் மற்றும் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தனர். அப்போது, என் மீதும் மண்எண்ணெய், டீசலை ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கலெக்டர் அன்புசெல்வன் சேத்தியாத்தோப்புக்கு விரைந்து சென்றார். அங்கு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கோட்டாட்சியர் ராஜேந்திரனை அழைத்து நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாவை அழைத்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்டார்.
தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போலீசாருடன், கோட்டாட்சியர் ராஜேந்திரன் தலைமையிலான அதிகாரிகள் மாலை 3.30 மணிக்கு அந்த பகுதிக்கு மீண்டும் சென்றனர். இந்த முறை போலீஸ் குவிக்கப்பட்டதால், ஆக்கிரமிப்பை அகற்றவந்த அதிகாரிகளை யாரும் தடுக்க முன்வரவில்லை.
தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் குமாரஉடைப்பு வாய்க்கால் மற்றும் அந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த உணவகம், தங்கும் விடுதி மற்றும் கழிப்பிடம் ஆகிய கட்டிடங்கள் அனைத்தும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த கட்டிடங்களின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் புவனகிரி தாசில்தார் ஹேமாஆனந்தி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் பார்த்திபன், பாஸ்கர் மற்றும் தீயணைப்பு துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
தொடர்ந்து இன்றும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story