வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்யும் பணி கலெக்டர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு


வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்யும் பணி கலெக்டர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 18 Sept 2018 4:22 AM IST (Updated: 18 Sept 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்யும் பணி நேற்று முதல் தொடங்கியது. இதை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருத்தாசலம், 


கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தேர்தலின் போது பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் விருத்தாசலத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரங்களில் அந்தந்த தொகுதிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள், போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில் 9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 300 வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர்கள் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார்கள் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் வாக்குப்பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்களும் வந்துள்ளது. இதற்காக பெங்களூருவில் இருந்து மொத்தம் 3 ஆயிரத்து 100 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, விருத்தாசலம் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை உறுதி படுத்தும் எந்திரம் ஆகியவற்றை பரிசோதனை செய்து, அவை முறையாக இயங்குகிறதா என்பதை உறுதிபடுத்தும் வகையில் பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருந்து பொறியாளர்கள் அடங்கிய தொழில்நுட்ப குழுவினர் விருத்தாசலத்திற்கு வருகை தந்து இருக்கிறார்கள். இவர்கள் நேற்று முதல், வாக்குப்பதிவு எந்திரங்களை பரிசோதனை செய்யும் பணியை தொடங்கினர்.

முன்னதாக கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திரா, தாசில்தார்கள் ஸ்ரீதரன், பாலமுருகன், துணை தாசில்தார்கள் அன்புராஜ், முருகன், கணினி இயக்குநர் சுரேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் சேமிப்பு கிடங்கு திறக்கப்பட்டது.

அதன் பின்னர், அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரங்களை பொறியாளர்கள் பரிசோதனை செய்யும் பணியை தொடங்கினர். இதில் ஏதேனும் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தால் அவற்றை உடனுக்குடன் சரிசெய்யும் பணியையும் அவர்கள் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இப்பணிகளை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்தவர்களிடம் பணிகளை நல்ல முறையில், விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் பெங்களூருவில் இருந்து வந்துள்ள தொழில்நுட்ப குழுவினருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும்படியும் விருத்தாசலம் வருவாய்த்துறையினருக்கு உத்தரவிட்டார். 

Next Story