வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் மாவட்டத்தில் 91 இடங்களில் பாதிப்பு ஏற்படும் - அதிகாரிகள் தகவல்


வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் மாவட்டத்தில் 91 இடங்களில் பாதிப்பு ஏற்படும் - அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 17 Sep 2018 11:03 PM GMT (Updated: 17 Sep 2018 11:03 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் 91 இடங்களில் பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்,

தமிழகத்தில் அடுத்த (அக்டோபர்) மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் பருவமழை வெள்ள பாதிப்புகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக வெள்ள பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அங்கு பொருட்சேதம், உயிர்சேதங்களை தவிர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கால்வாய், ஏரி, குளங்களை தூர்வாரவும், ஏரி, குளம், ஆறுகளின் கரைகளை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான பணியில் பொதுப்பணித்துறை உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பருவமழை வெள்ளமானது தங்கு தடையின்றி ஏரி, ஆறு, குளங்களுக்கு செல்வதற்கு நீர் கால்வாய்கள் உள்ளதா? என ஆராயவும், நீர் கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்தால், அதனை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது வேலூர் மாவட்டத்தில் 82 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு பருவமழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் குறித்து கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கூடுதலாக 9 இடங்கள் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளன. பருவ மழையின்போது மாவட்டத்தில் 91 இடங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாடி தாலுகாவில் கெம்பராஜபுரம் ஏரி, கீழுர் பாலாறு, மேல்பாடி பொன்னையாறு, கொல்லப்பள்ளி சுப்பனாய் ஏரி, அரக்கோணம் தாலுகாவில் மின்னல் பகுதி, குடியாத்தம் தாலுகாவில் குடுமிப்பட்டி ஏரி, வாலாஜா தாலுகாவில் புளியந்தாங்கல் ஏரி, வி.சி.மோட்டூர் ஏரி, பூட்டுத்தாக்கு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கால்வாய் என 9 இடங்கள் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது பாதிப்பு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது.

பருவமழை வெள்ள சேதத்தை தடுக்க ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், துப்புரவு ஊழியர்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை வெள்ளத்தால் 91 இடங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்டு அவர்களை தங்க வைக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரி, சமுதாய கூடம், திருமண மண்டபம் உள்பட மாவட்டம் முழுவதும் 100 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story