கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்


கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்
x
தினத்தந்தி 18 Sept 2018 3:00 AM IST (Updated: 18 Sept 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

கடைமடைக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிடக் கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், அலுவலக கதவை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,


தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள், மகளிர், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதிராம்பட்டினம் கடைமடை பகுதி விவசாயிகள், நீர்நிலை பாதுகாப்பு ஆர்வலர்கள், மீனவர்கள், ஜமாத்தார்கள், கிராமமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.

10 பேரை மட்டுமே அனுமதிப்போம் என்று கூறி அந்த 10 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாசில்தார் அருணகிரி மற்றும் போலீசார், கலெக்டர் அண்ணாதுரையிடம் அழைத்து சென்றனர். அப்போது அனைவரும் கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன் கலெக்டர் அலுவலக நுழைவு கதவையும் இழுத்து பூட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் கலெக்டரை சந்தித்த விவசாயிகள், அனைவரும் கோரிக்கை மனு அளிப்பதற்காக தான் வந்தோம். ஆனால் கலெக்டர் அலுவலகம் வெளியே அனைவரையும் தடுத்து நிறுத்தினால் எப்படி? அவர்களையும் உள்ளே வர அனுமதிக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து முன்பக்க நுழைவு கதவு திறக்கப்பட்டு, அனைவரும் கூட்ட அறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏரி, குளங்கள் நீரின்றி வறண்டு காணப்படுகிறன்றன. நிலத்தடி நீர், உப்பு நீராக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் பகுதியில் ஆறுகளில் நீர்வரத்து அறவே இல்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே இவற்றை தவிர்க்கும் விதத்தில் குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை மட்டும் முழுமையாக நம்பியுள்ள அதிராம்பட்டினம் கடைமடை பகுதிக்கு தாமதமின்றி முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிட்டு ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பூதலூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சிலர், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்துவிட்டதால் ஆச்சாம்பட்டி, செங்கிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடும் வறட்சி ஏற்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது.

குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில் ஏரிகளை தூர்வார டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும் ஆச்சாம்பட்டி ஆச்சான் ஏரி இன்னும் தூர்வாரப்படவில்லை. தற்போது பருவமழை தொடங்க இருப்பதால் ஏரியை உடனே தூர்வார வேண்டும். வன்னியம்படடி பகுஜான் ஏரியை தூர்வாராமலேயே தூர்வாரிவிட்டதாக ஒப்பந்ததாரர் மூலம் ரசீது பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து தூர்வாராத வன்னியம்பட்டி பகுஜான் ஏரியை தூர்வார வேண்டும். வெண்டையம்பட்டி ஊராட்சியில் வீடு, கழிப்பறை கட்டும் திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகளை மறைக்கும் நோக்கில் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story