பிரகாஷ் அம்பேத்கர், ஒவைசி கூட்டணி போலியானது சிவசேனா சாடல்


பிரகாஷ் அம்பேத்கர், ஒவைசி கூட்டணி போலியானது சிவசேனா சாடல்
x
தினத்தந்தி 18 Sept 2018 6:11 AM IST (Updated: 18 Sept 2018 6:11 AM IST)
t-max-icont-min-icon

பிரகாஷ் அம்பேத்கர், ஒவைசி கூட்டணி போலியானது என சிவசேனா கட்சி கடுமையாக சாடி உள்ளது.

மும்பை,

சட்டமேதை அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் பரிபா பகுஜன் மகாசங் என்ற கட்சியை நடத்தி வருகிறார். இவருக்கு தலித்துகளின் ஆதரவு உள்ளது. இந்த நிலையில் இவருடைய கட்சியும், ஆசாதுதின் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற மற்றும் மராட்டிய சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த கூட்டணி குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன், தலித் இன தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூட்டணி அமைத்தது நல்ல சகுணமாக தெரியவில்லை.

இதுவரை இரு கட்சிகளும் திரை மறைவில் இருந்து பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு அளித்து வந்தன. தற்போது வெளிப்படையாகவே அந்த கட்சிக்கு உதவி செய்ய உள்ளனர்.

பாபாசாகேப் அம்பேத்கர் இந்து மதத்தில் உள்ள அநீதியான மரபுகளை எதிர்த்து போராடினார். ஆனால் அதற்காக தீவிர முஸ்லிம் குழுக்களுடன் அவர் கைகோர்க்கவில்லை. முஸ்லிம் மதத்திற்கு மாறுவதையும் அவர் நிராகரித்தார்.

ஆனால் பாபாசாகேப் அம்பேத்கரின் பேரன் இதுபோன்ற நபர்களுடன் கூட்டணி அமைப்பது அவர் சொந்த சமூகத்தினருக்கே துரோகம் இழைப்பது போன்றதாகும்.

இருப்பினும் உண்மையான முஸ்லிம்கள் மற்றும் பட்டியலின இளைஞர்கள் இந்த பொய்யான கூட்டணியில் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story