வேங்கிடகுளத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் மனு, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்


வேங்கிடகுளத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் மனு, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்தனர்
x
தினத்தந்தி 18 Sept 2018 7:35 AM IST (Updated: 18 Sept 2018 7:35 AM IST)
t-max-icont-min-icon

வேங்கிடகுளத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி புதுக்கோட்டையில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெண்கள் மனு கொடுத்தனர்.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

கூட்டத்தில் நமணசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் நமணசமுத்திரத்தில் இருந்து பொன்னமராவதி செல்லும் சாலையின் அருகே சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். இதனால் மேற்படி சாலைக்கு எந்த இடையூறும் கிடையாது. ஆனால் தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எங்கள் வீடுகளை 7 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என முன் அறிவிப்பு கொடுத்து உள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமாக ஆகிவிடும். எனவே அரசு அதிகாரிகள் எடுக்கும் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தி, எங்களுக்கு அரசு இடத்தில் மாற்று இடம் வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொடுத்த மனுவில், அறந்தாங்கி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மட்காத குப்பைகளை பிரிப்பதற்கு ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் எந்திரம் வாங்கப்பட்டு, 20 துப்புரவு தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே வேலை செய்து வந்த 20 துப்புரவு பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி உள்ளனர். மேலும் குப்பைகளை பிரிப்பதற்கு அறந்தாங்கி நகராட்சியால் வாங்கப்பட்ட எந்திரமும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. எனவே வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டு உள்ள 20 துப்புரவு தொழிலாளர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும். மேலும் செயல்படாமல் உள்ள குப்பைகளை பிரிக்கும் எந்திரத்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கிடகுளம் பகுதியை சேர்ந்த பெண்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் இருந்த டாஸ்மாக்கடை எங்களது எதிர்ப்புகளை தொடர்ந்து மூடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே டாஸ்மாக் கடையை திறந்து உள்ளனர். இந்த டாஸ்மாக் கடையில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக பக்கத்து கிராமங்களில் இருந்து எங்கள் கிராமத்திற்கு பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை மூட வைப்போம் என கூறியிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம். கடம்ப்பட்டி கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு இடையே வெடி பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யும் வாணப்பட்டறை இயங்கி வருகிறது. இங்கு வெடி பொருட்களை வாங்க வருபவர்களிடம் வெடியை வெடித்து காண்பித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெடித்து காண்பிக்கும்போது, பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடிப்பதால் ஆடு, மாடுகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே எங்கள் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாணப்பட்டறையினை நடத்தக்கூடாது. எனவே மேற்படி வாணப்பட்டறைக்கு வழங்கி உள்ள உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.

Next Story