பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து சம்பவம் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி


பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து சம்பவம் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 Sept 2018 2:30 AM IST (Updated: 18 Sept 2018 6:21 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் அடுத்தடுத்த சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.

நெல்லை, 

நெல்லையில் அடுத்தடுத்த சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.

தண்டவாளத்தில் பிணங்கள்

நெல்லை தெற்கு புறவழிச்சாலைக்கும் குலவணிகர்புரம் ரெயில்வே கேட்டுக்கும் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணும், பாளையங்கோட்டை தியாகராஜ நகர் ரெயில் தண்டவாளத்தில் 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும் உடல் சிதறி பிணமாக கிடந்தனர்.

இதனை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்–இன்ஸ்பெக்டர் ஜூலியட் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் விசாரணை

இதில் குலவணிகர்புரம் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. அவர் பூ போட்ட கைலியும், நீல நிற சட்டையும் அணிந்திருந்தார். அவருடைய முகமும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்திருந்தது. அவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்ததால் ரெயில் வரும்போது தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அவரது உடல் சிதறி 100 அடி தூரத்துக்கு கிடந்தது. அவரது கையின் ஒரு பகுதி ரெயில் என்ஜினில் சிக்கி வேறு எங்கேனும் போய் விழுந்திருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

தியாகராஜநகர் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பெண் மஞ்சள் நிறத்தில் பூப்போட்ட சேலை அணிந்திருந்தார். அவரும் யாரென்று உடனடியாக தெரியவில்லை. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவர் தியாகராஜ நகர் பூங்கா பகுதியில் உள்ள ஒரு கடை அருகில் அமர்ந்து பொதுமக்கள் கொடுக்கும் உணவை வாங்கி சாப்பிட்டு உள்ளார்.

அவர் நேற்று காலை நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற ரெயியில் அடிபட்டு இறந்துள்ளார். அவரும் ரெயில் முன்பு படுத்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இவர் குடும்ப தகராறில் தியாகராஜ நகர் பகுதிக்கு வந்து, விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடந்தபோது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்று நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயிலில் அடிபட்டு இறந்த 2 பேரின் உடல்களும் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை கூடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. அவர்களின் உறவினர்கள் குறித்து போலீசார் விவரங்களை திரட்டி வருகின்றனர். அடுத்தடுத்த சம்பவங்களில் 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்த பகுதிகளில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story