தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Sep 2018 9:30 PM GMT (Updated: 18 Sep 2018 5:54 PM GMT)

கடைமடை பகுதிக்கு முறை வைக்காமல் தண்ணீர் திறந்துவிடக்கோரி வாய்மேடு அருகே விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாய்மேடு, 


மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி நாகை மாவட்டம் தாணிக்கோட்டகம், தரகமருதூர், வடமழை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொண்டனர். தற்போது ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்து விட்டதால் அந்த கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பயிர்கள் கருகி வருகின்றன.

இந்த நிலையில் கருகி வரும் சம்பா பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரியும், கடைமடை பகுதிகளுக்கு தேவையான தண்ணீரை முறை வைக்காமல் திறந்து விட வலியுறுத்தியும் நேற்று வாய்மேடு அருகே உள்ள செங்காத்தலை மெயின் சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க நிர்வாகி ரவி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் தமிழ்ச்செல்வன், பணி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் தேவையான தண்ணீரை திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story