தூய்மையே சேவை விழிப்புணர்வு பிரசாரம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் மகாத்மா காந்தி 150-வது பிறந்தநாள் விழா மற்றும் தூய்மைபாரத இயக்கத்தின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி தூய்மையே சேவை என்னும் பிரசாரம் மற்றும் தூய்மை பணி நடக்கிறது.
அதன்படி நாளை(வியாழக்கிழமை) திடக்கழிவு சேகரிப்பு பணிகள், 100 சதவீதம் ஆய்வு மற்றும் மேல்நிலை தொட்டிகள் தூய்மை பணி ஆய்வு, 22, 23-ந் தேதிகளில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டமாணவர்கள் மூலம் சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், தெருக்களில் தூய்மை பணி நடத்தப்படுகிறது.
வருகிற 24-ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் சுகாதார முகாம் நடத்துதல், 25-ந் தேதி ஒவ்வொரு தூய்மைத் தொண்டரும் புதிய தூய்மைத் தொண்டர்களை அறிமுகம் செய்தல் 26-ந் தேதி கிராமப்புறங்களில் தூய்மைப்பணிகள் தொடர்பாக இரவு நேரக்கூட்டங்கள், 27-ந் தேதி காலை நேர நடைபயணம் மற்றும் கைவிளக்குப் பேரணிகளை கிராமங்களில் நடத்துதல், 28-ந் தேதி வட்டார அலுவலகங்களில் தூய்மைக் காவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
வருகிற 1-ந் தேதி தூய்மைப் பேரணிகள் மற்றும் உறுதியேற்பு நிகழ்ச்சிகள் 2-ந் தேதி கிராமப்புறங்களில் இரட்டை உறிஞ்சு குழிகள் தூய்மைப்பணி மற்றும் கிராம சபைகளில் தூய்மையே சேவை இயக்கத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி மற்றும் சிறப்பாகப் பணிபுரிந்தவர்களுக்கும் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இதையொட்டி விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்தார். பின்னர் தொடர் பிரசாரத்துக்கான பிரத்யேக வாகனத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் தூய்மை குறித்து பிரசாரம் மேற்கொள்ளப்படும்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.தனபதி, மகளிர் திட்ட அலுவலர் ரேவதி, பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் உமாசங்கர், உதவி திட்ட அலுவலர்கள் தேவிகா, ஜான்கென்னடி, விநாயகசுப்பிரமணியன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story