எச்.ராஜாவை கண்டித்து ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறையினர் அலுவலக புறக்கணிப்பு போராட்டம்


எச்.ராஜாவை கண்டித்து ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறையினர் அலுவலக புறக்கணிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:00 PM GMT (Updated: 18 Sep 2018 7:13 PM GMT)

ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறையினர் அலுவலக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையினர் போராட்டம் நடத்தினர்.

அதன்படி ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஊழியர்கள் அலுவலக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே வந்தனர். பின்னர் அலுவலகம் முன்பு எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில் செயல் அதிகாரி கங்காதரன் உள்பட ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர். அவர்கள் எச்.ராஜாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை கைது செய்யக்கோரியும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:–

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பற்றியும், அவர்களது வீட்டு பெண்களை பற்றியும் எச்.ராஜா இழிவாக பேசி உள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் நாகரிகம் இல்லாமல் இதுபோன்று பொதுக்கூட்டங்களில் பேசிய அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி இந்து சமய அறநிலையத்துறை கூட்டுக்குழு சார்பில் அலுவலக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கத்தினர், அலுவலர்கள் சங்கத்தினர், அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர், கோவில் பணியாளர்கள் சங்கத்தினர் கலந்துகொண்டனர். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் எச்.ராஜாவின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story