மடத்துக்குளம் அருகே குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்


மடத்துக்குளம் அருகே குடிநீரில் சாக்கடைநீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:00 PM GMT (Updated: 18 Sep 2018 7:43 PM GMT)

மடத்துக்குளம் அருகே குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மடத்துக்குளம்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியத்திற்குட்பட்டது கொழுமம் ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியிலுள்ள வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கலங்கலான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும், இதில் லேசாக துர்நாற்றம் வீசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்றுமுன்தினம் மாலை வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் முழுவதுமாக கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் பயங்கர துர்நாற்றத்துடன் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் திரண்டு கொழுமம் மூன்று ரோடு பகுதியில் நேற்றுகாலை 8.15 மணி அளவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல வழியில்லாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் செல்லமுடியாமல் தவித்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கையில் வீட்டுக்குழாயிலிருந்து சேகரித்த கழிவுநீர் கலந்த குடிநீரை பாட்டில்களில் பிடித்து வைத்த வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில் ‘‘பல பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சில இடங்களில் கழிவுநீர் கால்வாய்களை ஒட்டியே குடிநீர் குழாய்கள் செல்கிறது. இதில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கலந்துள்ளது.

இதுகுறித்து தெரியாமல் தண்ணீரை குடித்த ஒரு சிலருக்கு லேசான வாந்தி ஏற்பட்டது. மேலும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் பலருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீருக்கு பதிலாக சாக்கடை கழிவுநீர் வினியோகம் செய்யப்பட்டது போல் தோற்றமளிக்கும் இந்த தண்ணீரை பாருங்கள் என்று ஆவேசமாக கூறினார்கள்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மடத்துக்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராமஊராட்சிகள்) மாலா மற்றும் மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பதாக உறுதி அளித்ததைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து சுகாதாரப்பணியாளர்கள் உதவியுடன் அம்பலக்காரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடைக்கழிவுநீர் கலந்திருப்பதற்கான சாத்தியக்கூறுள்ள இடங்களில் பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் இணைப்புகளை பரிசோதனை செய்தனர்.


Next Story