ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ நிதிஉதவி கலெக்டர் ஷில்பா தகவல்


ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ நிதிஉதவி கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 19 Sept 2018 3:00 AM IST (Updated: 19 Sept 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் ஆதி திராவிடர்களுக்கு தாட்கோ மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை, 


2018-19-ம் நிதி ஆண்டில் தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடர்களுக்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல், விவசாயத்துக்கு விரைந்து மின்இணைப்பு பெறுதல், தொழில் முனைவோர், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு மற்றும் ஆஸ்பத்திரி அமைத்தல் ஆகியவற்றுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.

மேலும் சுய உதவி குழுக்களுக்கான சுழல் நிதி, பொருளாதார கடன் உதவி திட்டம், கலெக்டரின் விருப்புரிமை நிதி திட்டம், மேலாண்மை இயக்குனரின் விருப்புரிமை நிதி திட்டம், தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி திட்டம், இந்திய குடிமை பணி முதன்மை தேர்வு (ஐ.ஏ.எஸ்.), டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 முதன்மை தேர்வு எழுதுவோருக்கும், சட்ட பட்டதாரி மற்றும் பட்டய கணக்கர், செலவு கணக்கர், நிறுவன செயலர் தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களில் கலெக்டரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் மட்டும் கலெக்டரிடம் திங்கட்கிழமை நடைபெறும் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு வழங்க வேண்டும். மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை திட்டம் மற்றும் தாட்கோ தலைவர் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் பயன்பெற நெல்லை மாவட்ட தாட்கோ மேலாளரிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். சட்ட பட்டதாரிகளுக்கு நிதி உதவி கோரி விண்ணப்பிப்போர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மற்ற திட்டங்களுக்கு httb://ap-p-l-i-c-at-i-on.tah-d-co.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இந்து ஆதிதிராவிடராகவும், 18 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு, ஆஸ்பத்திரி அமைக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 45 வயதுக்குள்ளேயும், சட்ட பட்டதாரி 21 வயது முதல் 45 வயதுக்குள்ளேயும், பட்டய கணக்கர் சம்பந்தப்பட்டவர்கள் 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் எனில் வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இளைஞர்கள் ஆஸ்பத்திரி அமைக்கும் திட்டம், ஐ.ஏ.எஸ். மற்றும் குரூப்-1 முதன்மை தேர்வுக்கு நிதி உதவி கோரி விண்ணப்பிப்பவர் எனில் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை ரோட்டில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா கூறி உள்ளார். 

Next Story