நெல்லை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
நெல்லை,
நெல்லை அருகே உள்ள சங்கர்நகர் சாரதாம்பாள் நகரை சேர்ந்த மாரியப்பன் மகள் சுஷ்மிதா (வயது 22). பட்டதாரியான இவர் தென்காசியில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுஷ்மிதா திடீரென்று காணாமல் போனார். இதுகுறித்து மாரியப்பன் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சுஷ்மிதாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சுஷ்மிதா தன்னுடைய காதல் கணவர் சிவந்திபட்டி காந்தி தெருவை சேர்ந்த கோட்டையப்பனுடன் (23) நேற்று நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அவர்களுக்கு ஆதரவாக வக்கீல் குமார் தலைமையில் வக்கீல்களும் வந்திருந்தனர்.
பின்னர் கோட்டையப்பன் போலீஸ் அதிகாரிகளிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
நான் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து முடித்து விட்டு கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறேன். கல்லூரியில் படித்தபோது, மகளிர் கல்லூரியில் படித்து வந்த சுஷ்மிதாவுடன் காதல் ஏற்பட்டது. இதை அறிந்த சுஷ்மிதாவின் பெற்றோர், அவரது விருப்பத்துக்கு எதிராக திருமண ஏற்பாடு செய்து வந்தனர். இதையடுத்து கடந்த 14-ந் தேதி நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால் எங்களுக்கு கொலை மிரட்டல் உள்ளது. எனவே எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து காதல் ஜோடியை தாழையூத்து போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story