விமானத்தின் கழிவறையில் மறைத்து கடத்தல் 8 கிலோ தங்க கட்டிகள் சென்னையில் பறிமுதல்


விமானத்தின் கழிவறையில் மறைத்து கடத்தல் 8 கிலோ தங்க கட்டிகள் சென்னையில் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Sept 2018 4:30 AM IST (Updated: 19 Sept 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தின் கழிவறையில் மறைத்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்க கட்டிகளை சென்னை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தங்கத்தை எடுத்துச்சென்ற வாலிபரை 12 மணி நேரம் காத்திருந்து அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கும், விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் அதிகாரிகள் விமானத்தில் சோதனை நடத்தினர். அப்போது விமானத்தின் கழிவறையில் ஒரு பார்சல் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் தங்ககட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானம் மீண்டும் காலை 6.20 மணிக்கு டெல்லிக்கு உள்நாட்டு விமானமாக இயக்கப்பட இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டெல்லி புறப்பட்ட அந்த விமானத்தில் 2 அதிகாரிகளும் டெல்லிக்கு சென்றனர். அங்கு கழிவறையில் உள்ள பார்சலை யாரும் எடுக்க வரவில்லை. பின்னர் அந்த விமானம் டெல்லியில் இருந்து சென்னைக்கு பகல் 12.30 மணிக்கு வந்தபோது யாரும் வரவில்லை.

பிறகு அதே விமானம் பகல் 1.30 மணிக்கு கோவை புறப்பட்டு சென்றது. அதே விமானத்தில் அதிகாரிகளும் சென்றனர். மாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமானம் வந்தது. அப்போது ஒருவர் கழிவறைக்கு சென்று அங்கிருந்த பார்சலை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

இதுபற்றி விமான நிலையத்தில் இருந்த மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு விமானத்தில் இருந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். பின்னர் விமான நிலையத்தில் அந்த வாலிபரை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அவர் வைத்திருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் 8 கிலோ எடையுள்ள 32 தங்க கட்டிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.2½ கோடியாகும்.

விசாரணையில் அவர், சென்னையை சேர்ந்த தாஜூதீன் (வயது 30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

துபாயில் இருந்து வந்தபோது அதிகாரிகள் கெடுபிடி அதிகமாக இருந்ததால் உள்நாட்டு விமானமாக சென்று திரும்பியபோது தங்க கட்டி பார்சலை எடுத்து செல்லலாம் என்று கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதுவரை விமான கழிவறையில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த தங்கத்தை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்துவிடுவார்கள்.

ஆனால் இந்த முறை கடத்தல்காரர்களை பிடிக்க வேண்டும் என்பதற்காக தங்க கட்டிகளை பறிமுதல் செய்யாமல் 12 மணி நேரம் தீவிரமாக கண்காணித்து கடத்தல்காரரை பிடித்து உள்ளனர். தங்கத்தை கடத்தி வந்த தாஜூதீன் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவரா? இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story