தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2018 4:45 AM IST (Updated: 19 Sept 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அரசு என்பது பொதுமக்களை பாதுகாக்கவா? அல்லது ஊழல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பாதுகாக்கவா? என்ற கேள்வி இப்போது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர், குட்கா போதைப்பொருள் உற்பத்தியாளர்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி அவரது வீடு, அலுவலகம் என்று அவர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியிருக் கிறது.

மேலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டிய போலீஸ் துறையில் உச்சநிலை அதிகாரியான டி.ஜி.பி. தொடங்கி, பல அதிகாரிகள் வீடுகளிலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியிருக்கிறது.

நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய அரசு, ஊழலில் சிக்கி தங்களை காத்து கொள்ள போராடிக் கொண்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளின் வீடுகளில் சோதனை போன்ற சம்பவங்கள் தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற அவல நிலையை போக்கிட நாம் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அணி வகுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கையில் ஏந்தியவாறு வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், அணிகளின் நிர்வாகிகள் பரிதா நவாப், ரஜினி செல்வம், அமீன், அஸ்லாம், டாக்டர் மாலதி நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story