பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப் பாலம் கட்டப்படும் - ரெயில்வே அதிகாரி பேட்டி


பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப் பாலம் கட்டப்படும் - ரெயில்வே அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 19 Sept 2018 4:45 AM IST (Updated: 19 Sept 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப்பாலம் கட்டப்படும் எனவும் இந்த பணி ஒரு வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையான பாலமாகும். பாலத்தின் எடை அதிகமாக உள்ளதால், கப்பல்கள் தூக்குப் பாலத்தை கடக்க வரும் போது பாலத்தை திறந்து மூட முடியாமல் ரெயில்வே பணியாளர்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த ரெயில்வே தூக்குப் பாலத்தை அகற்றிவிட்டு மின் சக்தி மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில்வே தூக்கு பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று ரெயில்வே கட்டுமான பிரிவு பொது மேலாளர் எம்.பி.சிங் பாம்பன் ரெயில் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து மோட்டார் டிராலி மூலம் ரெயில் தூக்கு பாலத்தை ஆய்வு செய்தார். அவருடன் முதன்மை திட்ட மேலாளர் ஜி.கே.ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அவர்கள் ரெயில்வே தூக்குப்பாலத்தின் மைய பகுதியில் உள்ள இணைப்பு மற்றும் மேல் பகுதிக்கு சென்று முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்விற்கு பின்பு ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் எம்.பி.சிங் நிருபர்களிடம் கூறியதாவது:–

 பாலத்தின் மைய பகுதியில் உள்ள தூக்குப்பாலத்தை மட்டும் அகற்றிவிட்டு புதிய தூக்குப்பாலம் அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது. இதே தூண்களில் புதிய தூக்குப் பாலம் கட்டி முடிக்க 10 மாதங்களாகும். அதுவரை ரெயில் போக்குவரத்தை நிறுத்த முடியாது. மேலும் பழமையான பாலம் என்பதால், இதை மாற்றி அமைக்க முடியாது.

பாம்பன் கடலில் தற்போது உள்ள ரெயில் பாலம் அருகிலேயே வடக்கு பகுதியில் புதிய தூக்குப் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பாம்பன் பகுதியில் இருந்து மைய பகுதி வரையிலும் பணிகளை தொடங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடன் மண்டபம் பகுதியில் இருந்து மைய பகுதி வரையிலும் 2–ஆம் கட்ட பணிகள் நடைபெறும். இவை நடைபெறும் போதே புதிய ரெயில் பாலத்தின் மைய பகுதியில் ஒரே இணைப்பில் மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் புதிய தூக்குப்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ரெயில்வே தூக்கு பாலம் ஒரு வருடத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். புதிய பாலம் கட்டி முடித்த பின்பு தான் அருகில் உள்ள பழைய பாலத்தை அகற்றுவது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story