விநாயகர் சிலைகள் ஊர்வலம் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


விநாயகர் சிலைகள் ஊர்வலம் : பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 19 Sept 2018 3:15 AM IST (Updated: 19 Sept 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

முத்துப்பேட்டை,


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில் 26-ம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலம் நேற்று நடந்தது. ஜாம்புவானோடை வடகாடு சிவன் கோவிலில் இருந்து தொடங்கிய ஊர்வலத்துக்கு முன்னாள் தாலுகா ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜப்பா தலைமை தாங்கினார். இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். ஜாம்புவானோடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், அனைத்து கிராம கமிட்டி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவபிரகாசம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக முன்னாள் மாவட்ட செயலாளர் தங்க அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தை ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா, இந்திய கல்வி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன், பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜாம்புவானோடை, வடகாடு, உப்பூர், தில்லை விளாகம், ஆலங்காடு உள்பட 19 இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டது. ஊர்வலம் வடகாடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரான் சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலகாடு, கோரையாற்று பாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத் நகர் சென்றது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக நியூ பஜார், கொய்யாமுக்கம், பங்களா வாசல், ஓடக்கரை, ரெயில்வே கேட் வழியாக செம்படவன்காடு சென்று பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பாமணி ஆற்றில் மாலை அதிர்வேட்டுகள் முழங்க அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டன.

பின்னர் அங்கு நடந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ. வேதரெத்தினம், மாவட்ட தலைவர்கள் சிவா(திருவாரூர்), வரதராஜன்(நாகை) உள்பட பலர் பேசினர். முடிவில் பா.ஜனதா மாவட்ட துணைச்செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.

ஊர்வலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக ஊர்வல பாதையை முழுவதும் ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. ஊர்வல பாதை முழுவதும் 100-க்கும் மேற்பட்ட வீடியோ கேமராக்கள் மூலம் காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. ஊர்வல பாதைகள் முழுவதும் ஆங்காங்கே 40-க்கும் மேற்பட்ட தற்காலிக கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டது.

சாலையின் இருபுறங்களிலும் தடுப்பு அமைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். கலவரம் ஏற்பட்டால் அதை தடுப்பதற்காக ஆங்காங்கே கண்ணீர் புகை வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன. முக்கிய பகுதியில் போலீசாரின் நடமாடும் கண்காணிப்பு கேமரா பொருத்திய வாகனங்களும் நிறுத்தப்பட்டது.

திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ தலைமையில் டி.ஐ.ஜி.க்கள் லோகநாதன்(தஞ்சை), லலிதா லட்சுமி(திருச்சி) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விக்ரமன்(திருவாரூர்), விஜயகுமார்(நாகை), செந்தில்குமார்(தஞ்சை), செல்வராஜ்(புதுக்கோட்டை), அபினவ்குமார்(அரியலூர்), ஜெயசந்திரன்(சிவகங்கை) ஆகியோர் முன்னிலையில் திருச்சி, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 25 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 100 இன்ஸ்பெக்டர்கள், 150 சப்-இன்ஸ்பெக்டர்கள், 200 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை போலீசார், ஆயுதப்படை போலீசார், போக்குவரத்து போலீசார், ஊர்க்காவல் படை போலீசார் உள்பட திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை சேர்ந்த 2,600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மன்னார்குடி உதவி கலெக்டர் பத்மாவதி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார் மற்றும் நீடாமங்கலம், வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி பகுதியை சேர்ந்த தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஊர்வல பாதையில் முகாமிட்டு இருந்தனர்.

முத்துப்பேட்டை அருகில் உள்ள தம்பிக்கோட்டை, ஆலங்காடு, கோவிலூர், கோபாலசமுத்திரம், இடும்பாவனம், தில்லைவிளாகம், பேட்டை மற்றும் சுற்று புறப்பகுதியில் காவல்துறை சார்பில் சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு முத்துப்பேட்டைக்குள் நுழையும் ஒவ்வொரு வாகனங்களையும், ஒவ்வொரு நபர்களையும் தீவிர சோதனை செய்த பிறகே ஊர்வலத்தில் கலந்து கொள்ள அனுமதித்தனர். அதேபோல் அனைத்து பகுதி சாலைகள் முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் கடல் வழியாக தீவீரவாதிகள் யாரும் ஊடுருவாமல் இருக்க கடற்கரை பகுதிகள் மற்றும் அலையாத்தி காடுகள், லகூன் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் கடற்படை போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டை பகுதி நேற்று முழுவதும் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது

முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நேற்று அரை நாள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. அதேபோல் முத்துப்பேட்டை பகுதி முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. 

Next Story