இளையான்குடி அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு


இளையான்குடி அருகே பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 19 Sept 2018 4:30 AM IST (Updated: 19 Sept 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே கக்குளத்து கண்மாயில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இளையான்குடி,

இளையான்குடி அருகே நாகமுகுந்தன்குடி பகுதியில் உள்ள கக்குளத்து கண்மாயில் தூர்வாரும் பணி நடைபெற்றது. அப்போது பழங்கால பொருட்கள் தென்பட்டன. இதனையடுத்து இந்துஸ்தான் கலை கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் ராஜேந்திரன் கண்மாயில் பழங்கால பொருட்களை கண்டெடுத்து, அதனை ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கக்குளத்து கண்மாயில் பழுப்புநிற பானை ஓடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கீறல் குறியீடு உள்ள பானை ஓடுகள், பளபளப்பான பானை ஓடுகள், தாங்கிகள், சிறுசட்டிகள், அதற்கான மூடிகள், மேல்மூடிகளின் குமிழ்ப்பகுதிகள், கருப்புநிற பொம்மை போன்ற புனல் பகுதிகள், பெண்கள் விளையாடும் ஓட்டுச் சில்லுகள், பெண்கள் காதில் அணியும் அணிகலன்கள், ஆநிரைகளின் எலும்புகள் மற்றும் பற்கள், உடைந்த தாழிகளின் ஓடுகள் போன்ற பழங்கால பொருட்கள் மேற்பரப்பு ஆய்வில் கண்டெடுக்கப்பட்டன. இந்த பொருட்கள் யாவும் 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது.

அரிக்கமேடு, காவிரி பூம்பட்டினம், காவிரி ஆற்றுப்படுகை, அழகன்குளம், காஞ்சீபுரம், ஆதிச்ச நல்லூர், கீழடி போன்ற ஊர்களில் நடத்தப்பெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பழங்கால பொருட்கள் போன்ற சில பொருட்கள் கக்குளத்து கண்மாயில் கிடைத்திருக்கிறது. எனவே தொல்லியல் துறையினர் இங்கு அகழாய்வு செய்ய வேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகமே உலகத்தின் முதல் நகர நாகரிகம் என்று போற்றி வந்த காலம் பின்தள்ளப்பட்டு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட நாகரிகமே தொன்மையான நகர நாகரிகமாக இருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த கருத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் தற்போது சிவகங்கையை சுற்றி இருக்கக்கூடிய கிராமங்களில் பழங்கால பொருட்கள் தென்படுகின்றன. எனவே அங்கு தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் மேற்கொண்டு கிடைக்கக்கூடிய பொருட்களை கீழடியின் நகர நாகரிகத்திற்கு கூடுதல் சான்றுகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story