கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் - குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 18 Sep 2018 10:30 PM GMT (Updated: 18 Sep 2018 9:02 PM GMT)

ஆட்டுக்காரம்பட்டியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும் என்று குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். மொத்தம் 263 மனுக்கள் கொடுக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் ஆட்டுக்காரம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், இந்த பகுதியில் 1980-ம் ஆண்டில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளில் 80 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் கழிவுநீர் சீராக வெளியேற வழியின்றி வீடுகள் முன்பு தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பென்னாகரம் அருகே உள்ள ஏர்கோல்பட்டியை சேர்ந்த பழனியம்மாள் தனது குடும்பத்தினருடன் கொடுத்த கோரிக்கை மனுவில், தமிழக அரசு கடந்த 1980-ல் கட்டி கொடுத்த தொகுப்பு வீட்டில் வசித்து வந்தோம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீடு இடிந்துவிட்டது. இதையடுத்து அங்கு வீடு கட்ட அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம். அங்கு அமைக்கப்பட்ட குடிசையை அகற்றி விட்டனர். அந்த இடத்தில் வீடுகட்ட உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று விசாரணை நடத்திய கலெக்டர் மலர்விழி அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளிக்கு விண்ணப்பம் வழங்கிய உடன் பரிசீலித்து தேசிய அடையாள அட்டையை கலெக்டர் வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களையும் அவர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ரகமதுல்லாகான், துர்காமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story