தொழில் அதிபரிடம் ரூ.23 லட்சம் மோசடி: புதுடெல்லியை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
இளையான்குடி அருகே தனியார் வங்கி கையகப்படுத்திய நிலத்தை தொழில் அதிபரிடம் ஏமாற்றி விற்று ரூ.23 லட்சம் மோசடி செய்த புதுடெல்லியை சேர்ந்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
சிவகங்கை,
இளையான்குடி அருகே மருதங்கநல்லூர், எஸ்.காரைக்குடி ஆகிய கிராமங்களில் 422 ஏக்கர் நிலம் தனியார் ஏற்றுமதி நிறுவனத்திற்கு சொந்தமானதாக இருந்தது. பின்னர் அந்த நிறுவனத்தினர் நிலத்தை தனியார் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றிருந்தனர். ஆனால் கடனை திருப்பிச் செலுத்தாததால் நிலத்தை தனியார் வங்கி நிலத்தை கையகப்படுத்தியது.
இதற்கிடையில் புதுடெல்லியை சேர்ந்த சதீஸ்சிங் லால், வினோத்குமார் ஜெயின், ஹரிஓம் கோயல் ஆகியோர் மருதங்கநல்லூர், எஸ்.காரைக்குடியில் வங்கி கையகப்படுத்திய நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என்று கூறி நாமக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ராதாகிருஷ்ணன்(45) என்பவருக்கு தருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் நிலத்தை விற்பதற்காக ராதாகிருஷ்ணனிடம் இருந்து கடந்த 12.1.17 அன்று ரூ.23 லட்சம் முன்பணமாக அந்த நபர்கள் பெற்றுக்கொண்டனர். அதன்பிறகு அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் விசாரித்தபோது அந்த நிலம் தனியார் வங்கி கையகப்படுத்தியது என்பதும், புதுடெல்லியை சேர்ந்த நபர்களுக்கு சொந்தமானது கிடையாது என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராதாகிருஷ்ணன், இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சதீஸ்சிங் லால் உள்பட 3 பேரை பிடிக்க தனிப்படையினர் புதுடெல்லி சென்றுள்ளனர்.