மாவட்டத்தில் 1,720 கர்ப்பிணிகளுக்கு சீதன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,720 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி சீதன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கையில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலம் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு, கர்ப்பிணிகளுக்கு சீதன பொருட்கள் வழங்கி வளைகாப்பு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:–
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சமுதாய வளைகாப்பு திட்டத்தை தொடங்கிவைத்தார். அனைத்து மாநிலங்களும் வரவேற்கப்பட்ட திட்டமாக இது உள்ளது. வறுமையில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் வளைகாப்பு நிகழ்வை கனவாக நினைத்து வந்ததை நிஜமாக்கும் வகையில் அரசே சமுதாய வளைகாப்பு நடத்தி, தாய்–தந்தை என்ன சீதன பொருட்கள் கொடுப்பார்களோ அதை வழங்குகிறது. இத்திட்டத்தில் ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் 7 வகையான சீதனப் பொருட்களுடன் 5 வகையான சாதங்கள் வழங்கப்படுகிறது. குழந்தை பராமரிப்பு குறித்த கையேடு வழங்கப்படுகிறது.
மேலும் கர்ப்பிணிகள் முதல் மாதம் முதல் பிரசவ காலம் வரை ஆரோக்கியமாக இருந்திட தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் ஊட்டச்சத்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் 1,720 கர்ப்பிணிகளுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சிவகங்கை ஒன்றியத்தை சேர்ந்த 160 கர்ப்பிணிகளுக்கும், கல்லல் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 120 கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு, சீதனப் பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு 5 வகையான சாதங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி, சிவகங்கை கோட்டாட்சியர்(பொறுப்பு) கீதா, கூட்டுறவு சங்க தலைவர் ஆனந்தன், வக்கீல் ராஜா, சசிகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.