ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் பிடிபட்டனர்
ஒரத்தநாடு அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் பணத்தை திருடிய 3 பெண்களை பயணிகள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் நெசலிங்கப்பா. இவருடைய மனைவி திலகா(வயது35). இவர் நேற்று மதியம் ஒரத்தநாட்டுக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு அங்கிருந்து ஒரு அரசு பஸ்சில் ஒக்கநாடு கீழையூருக்கு சென்று கொண்டிருந்தார். திலகா சென்ற பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 3 பெண்கள் திலகாவை சூழ்ந்து கொண்டு அவர் பையில் வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை திருடிக்கொண்டு திலகா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த திலகா சத்தம் போட்டார்.
உடனே பஸ்சில் இருந்த சக பயணிகள் உடனடியாக பஸ்சை நிறுத்தி பஸ்சில் இருந்தவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது திலகாவின் பக்கத்தில் பஸ்சில் நின்று கொண்டு வந்த ஒரு பெண்ணிடம், திலகாவிடம் திருடிய பணம் இருந்தது. இந்த திருட்டில் தொடர்புடைய மேலும் 2 பெண்கள் அதே பஸ்சில் இருப்பதையும் பயணிகள் கண்டுபிடித்தனர். இதனால் அந்த 3 பெண்களையும் பயணிகள் பிடித்து வைத்துக்கொண்டு ஒரத்தநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் 3 பெண்களையும் பிடித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையின் போது அவர்கள் போலியான பெயர் மற்றும் முகவரிகளை தெரிவித்தனர். இதனால் போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story