கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை: சுவாதியின் தாயார் அதிர்ச்சி தகவல்


கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை: சுவாதியின் தாயார் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 19 Sept 2018 4:45 AM IST (Updated: 19 Sept 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் யாரென்று தெரியாது என சுவாதியின் தாயார் அதிர்ச்சி தகவல் அளித்தார்.

நாமக்கல்,

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் நேற்று நாமக்கல் கோர்ட்டில் அவரது கல்லூரி தோழி சுவாதியின் தாயார் செல்வி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவம் யாரென்று தெரியாது என கூறி போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23) கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை கடந்த 30-ந் தேதி முதல் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அரசு தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோகுல்ராஜின் தோழி சுவாதி கடந்த 10-ந் தேதி சாட்சியம் அளித்தார். அப்போது அவர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்செங்கோடு மலையில் இருந்து சேகரித்து இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவம் தான் இல்லை என்றும், சம்பவத்தன்று கோவிலுக்கு செல்லவில்லை என்றும், கோகுல்ராஜ் கொலை சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறிவிட்டார். இது சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 15 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். கோகுல்ராஜின் கல்லூரி தோழி சுவாதியின் தாயார் செல்வி சாட்சியம் அளித்தார். நீதிபதி இளவழகன் முன்னிலையில் சுமார் 2 மணி நேரம் அவரிடம் அரசுத்தரப்பு வக்கீல் கருணாநிதி கேள்விகளை கேட்டு, பதில் பெற்றார்.

குறிப்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கில் சேகரித்து இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை சுட்டிக்காட்டி அரசு தரப்பு வக்கீல் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள உருவம் யாரென்று எனக்கு தெரியாது என்று கூறி போலீசாருக்கு அதிர்ச்சி அளித்தார். மேலும் பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் அளித்தார்.

கோகுல்ராஜின் தோழி சுவாதியை தொடர்ந்து, அவரது தாயாரும் இந்த கொலை சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என கூறியதால் இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இது குறித்து அரசு சிறப்பு வக்கீல் கருணாநிதி கூறியதாவது:-

சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேகரித்து வைத்து உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் சுவாதியின் தாயார் செல்விக்கு ஒளிபரப்பி காண்பிக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் உள்ள உருவம் எனக்கு யாரென்று தெரியவில்லை எனவும், எனது மகள் இல்லை என்றும் கூறிவிட்டார்.

அதேசமயம் கோகுல்ராஜின் நண்பர் கார்த்திக் ராஜா கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை பார்வையிட்டு கோகுல்ராஜ் மற்றும் சுவாதி ஆகியோரை அடையாளம் காண்பித்து உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து இந்த வழக்கில் பள்ளிபாளையம் ரெயில்வே துணை மேலாளர் கதிரேசன், ரெயில் ஓட்டுனர்கள் வடிவேல், முனுசாமி, திருச்செங்கோட்டில் கோகுல்ராஜ் படித்த தனியார் கல்லூரி முதல்வர் தியாகராஜன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

Next Story