பால் குளிரூட்டும் நிறுவனம் நடத்தி முகவர்களிடம் ரூ.32 லட்சம் மோசடி
பண்ருட்டி அருகே பால் குளிரூட்டும் நிறுவனம் நடத்தி முகவர்களிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்,
புதுச்சேரி தவளக்குப்பத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருடைய மனைவி சுதா. இவரது தந்தை பன்னீர்செல்வம். இவர்கள் 3 பேரும் சேர்ந்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பைத்தாம்பாடி கிராமத்தில் பால் குளிரூட்டும் நிறுவனம் நடத்தி வந்தனர்.
இதில் பைத்தாம்பாடியை சேர்ந்த பாவாடை உள்பட 71 பேரை முகவர்களாக சேர்த்து, பொதுமக்களிடம் இருந்து பால் வாங்கி தங்களிடம் ஊற்றுமாறு கூறினர். இதற்கு சம்மதம் தெரிவித்த அவர்கள் 2 ஆயிரம் பேரிடம் பால் வாங்கி அவர்களிடம் ஊற்றி வந்தனர். ஆனால் பாலுக்கான பணம் 32 லட்சத்து 17 ஆயிரத்து 924 ரூபாயை கடந்த 2016-ம் ஆண்டு முதல் தற்போது வரை 3 பேரும் கொடுக்கவில்லை.
இது பற்றி பாவாடை உள்ளிட்ட முகவர்கள் கேட்டதற்கு, அவர்களை காரை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியும், நம்பிக்கை மோசடி செய்தும் ரூ.32 லட்சத்து 17 ஆயிரத்து 924-யை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இது குறித்து பாவாடை கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுதா, செல்வக்குமார், பன்னீர்செல்வம் ஆகிய 3 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story