கடலூர், விருத்தாசலத்தில் அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க. அரசின் ஊழலை கண்டித்து கடலூர், விருத்தாசலத்தில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழல், நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களையும், அ.தி.மு.க. அரசின் மக்கள் விரோத போக்கையும் கண்டித்து கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு ஊழலில் கரை கண்டுள்ளது. குட்கா ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் பதவி விலக வேண்டும். மேலும் இந்த குற்றச்சாட்டிற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சரும் பதவி விலக வேண்டும்.
கடலூரில் ராமசாமி படையாட்சியாருக்கு நினைவு மண்டபம் கட்ட எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி உள்ளார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்திருந்தால், நேரில் வந்து அடிக்கல் நாட்டியிருப்பார்.
மருத்துவக்கல்லூரி என்ன ஆனது?
தி.மு.க. ஆட்சியில் கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி கட்ட மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ஆனால் இந்த தொகுதியின் அமைச்சர் எம்.சி.சம்பத் அந்த மருத்துவக்கல்லூரியை கிடப்பில் போட்டு விட்டார்.
2011-ம் ஆண்டு வீசிய ‘தானே’ புயலில் பாதிக்கப்பட்ட பகுதிளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 10 கோடி ரூபாய் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறைக்கு வந்து உள்ளது. அதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொய்யான பில்கள் போட்டு கொள்ளையடித்து உள்ளனர்.
கடலூர் நகரில் பாதாள சாக்கடை திட்டம் இன்னமும் சரியாக செயல்பாட்டுக்கு வரவில்லை. அப்போது நம்மை எதிர்த்து போராடியவர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்.
கடலூர் முதுநகரில் ‘டியூப்பில் பஞ்சர்’ ஒட்டியது போல 15 கோடி ரூபாய்க்கு ரோடு போட்டு உள்ளனர். 6 மாதத்துக்குள்ளாகவே அந்த ரோடு பழுதடைந்து உள்ளது. எனவே இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர தோழர்கள் உழைக்க வேண்டும். மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சரானால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வார்.
இவ்வாறு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசினார்.
முன்னதாக அ.தி.மு.க. அரசை கண்டித்து சிறிது நேரம் கோஷம் போட்டனர். ஆர்ப்பாட்டத்தில் துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள.புகழேந்தி, மருதூர் ராமலிங்கம், மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, மாவட்ட பொருளாளர் குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சுப்புராம், காசிராஜன், சிவகுமார், தங்க ஆனந்தன், கடலூர் நகர செயலாளர் ராஜா, வக்கீல் பிரிவு அமைப்பாளர் சிவராஜ், துணை அமைப்பாளர் பிரபுமுத்து, பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குழந்தை தமிழரசன், முத்துக்குமார், மாவட்ட பொருளாளர் பாவாடைகோவிந்தசாமி, நகர இளைஞரணி பொன்கணேஷ், ஒன்றிய செயலாளர் கனககோவிந்தசாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், வக்கீல் அணி துணை அமைப்பாளர் மணிகண்டராஜன், நகர இளைஞரணி கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, சார்பணி நிர்வாகிகள் கலந்து கொண்டு அ.தி.மு.க. அரசை கண்டித்து கோஷமிட்டனர். முன்னதாக நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார். முடிவில் நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story