மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்


மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2018 3:40 AM IST (Updated: 19 Sept 2018 3:40 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே மணல் குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொள்ளிடக்கரையோர கிராமமான குஞ்சமேட்டில் அரசு மாட்டு வண்டி மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்ததால், மணல் குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததையடுத்து, நேற்று முன்தினம் தொழிலாளர்கள் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குவாரிக்கு சென்றனர்.

இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மணல் அள்ள வந்த மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், இந்த மணல் குவாரியால் தங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் மணல் குவாரியை மூடவேண்டும் என்று கூறினர். அதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை குவாரியில் இருந்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ளக்கூடாது என்று தெரிவித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story