அறநிலையத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பணியாளர்கள் போராட்டம்


அறநிலையத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பணியாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2018 3:00 AM IST (Updated: 19 Sept 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

எச்.ராஜாவை கைது செய்ய கோரி, விழுப்புரம் மற்றும் மேல்மலையனூரில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட்டு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 


இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களை தரக்குறைவாக பேசிய பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்தும், அவரை உடனே கைது செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று மதியம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தையொட்டி இணை ஆணையர், உதவி ஆணையர் அலுவலக பணியாளர்கள், தணிக்கைத்துறை பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் ஆகியோர் நேற்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பணியை புறக்கணித்து அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து அவர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு சங்க கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் பேராதரன், சரவணன், செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு எச்.ராஜாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். பின்னர் அனைவரும் பணிக்கு செல்லாமல், வீடு திரும்பினார்கள்.

இதேபோல் மேல்மலையனூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சங்கங்களின் சார்பில் அங்காளம்மன் கோவிலில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும், அலுவலகத்தை பூட்டிவிட்டு பணியை புறக்கணிப்பு செய்தனர். பின்னர் எச்.ராஜாவை கைது செய்ய கோரி, சிறிது நேரம் அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தபகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story