தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்


தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 18 Sep 2018 9:45 PM GMT (Updated: 18 Sep 2018 10:46 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்கலாம் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,


வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை விபத்தில்லா தீபாவளியாக கொண்டாடுவதற்காக பட்டாசு விற்பனை உரிமம் பெற்றவர்கள் மட்டுமே பட்டாசுகளை சில்லறையில் விற்பனை செய்ய வேண்டும். உரிமம் கோரும் வணிகர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிபொருள் விதிகள் 2008-ன்படி உரிய உரிமம்பெற வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர உரிமம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. மூலம் தங்களின் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். தேனி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய உரிமம் பெற விரும்பும் வணிகர்கள் கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை வருகிற 28-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்கள், கூர்ந்தாய்வு கட்டணம் ரூ.300, உரிம கட்டணம் ரூ.600 செலுத்தியதற்கான விவரம் ஆகியவற்றுடன் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிப்பவர்கள் தீபாவளிக்கு முன்பாகவே வியாபாரத்தை தொடங்குவதற்கு வசதியாக அனைத்து சார்நிலை அலுவலர்களிடம் இருந்தும் விரைவில் அறிக்கை பெற்று உடனடியாக ஆய்வு செய்து அடுத்த மாதம் (அக்டோபர்) 20-ந்தேதிக்குள் உரிமம் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே, 28-ந்தேதிக்கு பின்பு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story