குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்
நத்தம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை,
நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர் களுக்கு அப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு சிறிய தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் கள் பழுதானதாக கூறப்படுகிறது.
இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதையொட்டி தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். இதுதவிர தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் அவர்கள் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், நேற்று காலிக் குடங்களுடன் சிறுகுடி-நத்தம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசாரும், சிறுகுடி ஊராட்சி செயலர் ராஜேஸ்வரியும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்மோட்டார் பழுதுநீக்கம் செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை லாரியில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று ஊராட்சி செயலர் கூறினார். மேலும் உடனடியாக லாரியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story