நாகர்கோவில், தக்கலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவில், தக்கலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:00 PM GMT (Updated: 18 Sep 2018 11:00 PM GMT)

நாகர்கோவில், தக்கலையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் குட்கா ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் தக்கலை ஆகிய 2 இடங்களில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஆஸ்டின் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, மாவட்ட பொருளாளர் கேட்சன், நகர செயலாளர் மகேஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு செயலாளர் தில்லைசெல்வம், ஒன்றிய செயலாளர்கள் தாமரைபாரதி, மதியழகன், அணி அமைப்பாளர்கள் சிவராஜ், உதயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசும்போது, “தமிழக அரசு 3 ஆண்டுகளாக பல்வேறு ஊழல்களை செய்துள்ளது. ஆனால் இதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. மேலும் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக வழங்கப்படுவது இல்லை. ஏழை பெண்களுக்கு ஸ்கூட்டர் மானியம் முழுமையாக வழங்கப்படவில்லை. குட்கா விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலோடு தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும். தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்“ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், திரளாக கலந்துகொண்ட தி.மு.க.வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பரபரப்பாக காணப்பட்டது.

தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பலீலா ஆல்பன், லாரன்ஸ், பத்மநாபபுரம் நகர செயலாளர் மணி, தக்கலை ஒன்றிய செயலாளர் அருளானந்த ராஜ், திருவட்டார் ஒன்றிய செயலாளர் ஜாண்பிரைட், மேற்கு மாவட்ட துணை செயலாளர் ஜான் கிறிஸ்டோபர், பைங்குளம் பேரூர் தி.மு.க. செயலாளர் அம்சி நடராஜன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கிளாடிஸ் லில்லி, குழித்துறை நகர செயலாளர் பொன். ஆசைதம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story