பழவேற்காட்டில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்


பழவேற்காட்டில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:08 PM GMT (Updated: 18 Sep 2018 11:08 PM GMT)

முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி பழவேற்காட்டில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழவேற்காட்டில் ஏரியும் கடலும் கலக்கும் முகத்துவாரத்தின் வழியாக மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக படகு மூலம் கடலுக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இயற்கை சீற்றம் காரணமாக முகத்துவார பகுதி மணல் மேடாக உள்ளது. இதனையடுத்து கடல் மற்றும் ஏரியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் மீனவர்கள் படகுகளில் சென்று மீன்பிடிக்க முடியவில்லை.

இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டனர். முகத்துவாரத்தை தூர் வாரக்கோரி தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுவரை தூர் வாரப்படவில்லை. இதனையடுத்து மீனவ கிராமங்களில் கூட்டம் நடத்தி போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு செய்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் முகத்துவார பகுதிக்கு சென்று முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், நிரந்தர துண்டில் வளைவு அமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீன்வளத்துறை அமைச்சர், இயக்குனர், மாவட்ட கலெக்டர், தொகுதி எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பழவேற்காடு பஜார் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் ஆகியோர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கலெக்டர் இன்று (புதன்கிழமை) முதல் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படும் எனவும் நிரந்தர தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்கு மத்திய அரசின் தடையில்லா சான்று கிடைத்தவுடன் ரூ.27 கோடி செலவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கலெக்டரின் உத்தரவாதத்தை ஏற்று மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மீனவர்களுக்கு ஆதரவாக பழவேற்காட்டில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்தது.

200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story