கூடலூரில் சாலையின் நடுவில் தடுப்புச்சுவர்: சாலையோரம் நிறுத்தப்பட்ட ஆட்டோக்களை அகற்ற எதிர்ப்பு
கூடலூரில் சாலையின் நடுவில் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோக்களை அகற்ற போலீசார் உத்தரவிட்டனர்.
கூடலூர்,
தமிழகம்– கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் இணையும் இடமாக கூடலூர் நகரம் உள்ளது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், சரக்கு லாரிகள் கூடலூர் வழியாக இயக்கப்படு கிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதுதவிர கூடலூரில் இருந்து கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், ஊட்டி, சென்னை, கன்னியாகுமரி உள்பட பல பகுதிகளுக்கு தினமும் பஸ்கள் இயக்கப்படுகிறது.
ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு போதிய பஸ்கள் இயக்கப்பட வில்லை. எனவே கூடலூரில் இருந்து கிராமப்புற பகுதி மக்களின் வசதிக்காக 3 ஆயிரம் ஆட்டோக்கள் மற்றும் ஜீப்புகள் இயக்கப்பட்டு வரு கிறது. இதனால் ஆட்டோ தொழிலை நம்பி டிரைவர்கள் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் பல இடங்க ளில் போக்குவரத்து போலீசார் இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்தனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்படுவதாக அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குறிப்பாக பழைய பஸ் நிலையத்தில் இருந்து சக்தி விநாயகர் கோவில் வழியாக ஊட்டிக்கு செல்லும் சாலையில் புதிதாக தடுப்புக்கம்பிகளை போலீசார் வைத்தனர். அங்கு அரசு பஸ்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இதனால் பயணிகளை ஏற்றி இறக்கும் போது மற்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அரசு பஸ்களை நிறுத்தும் இடத்தை போக்குவரத்து போலீசார் மாற்றினர்.
இதையடுத்து பஸ்களை நிறுத்தி வந்த இடத்தில் ஆட்டோ, ஜீப்புகளை நிறுத்த போலீசார் அனுமதித்தனர். இதனால் அரசு பஸ்களுக்கு வருவாய் கிடைப்பது இல்லை. எனவே பழைய இடத்திலேயே பஸ்களை நிறுத்த அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து கழக நிர்வாகம் போலீசாரை கேட்டு கொண்டது. ஆனால் போலீசார் அனுமதிக்க வில்லை.
இதனால் கடந்த மாதம் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் இடையே சக்தி விநாயகர் கோவில் முன்பு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சாலையில் இரும்பு தடுப்புக்கம்பிகளை வைத்து போலீசார் இடையூறு செய்வதாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலையின் நடுவில் வைத்த இரும்பு தடுப்புக்கம்பிகளை போலீசார் அகற்றினர். அதன்பிறகு கூடலூர் பழைய பஸ் நிலையம் முதல் ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி மற்றும் பாதிப்புகள் ஏற்பட வில்லை.
இந்த நிலையில் கடந்த 12–ந் தேதி நள்ளிரவு கூடலூர் அக்ரஹார தெருவுக்கு திரும்பும் இடத்தில் இருந்து சக்தி விநாயகர் கோவில் வழியாக ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் தடுப்புச் சுவர்கள் அமைத்தனர். இதனால் வாகனங்கள் மட்டும் செல்லும் அளவுக்கு சாலை மிகவும் குறுகலாக மாறியது. மேலும் சாலையை கடந்து செல்ல பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதற்கிடையே அதே பகுதியில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆட்டோக்களால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே ஆட்டோக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என போக்குவரத்து போலீசார் நேற்று டிரைவர்களிடம் கூறினர்.
இது பற்றி ஆட்டோ டிரைவர்கள் கேட்ட போது, உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுப்பாக போலீசார் கூறினர். இதனால் போலீசாரின் உத்தரவை கண்டித்து ஆர்.டி.ஓ. அலுவலகம் மற்றும் போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோவை நிறுத்தி டிரைவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்க வில்லை என்றால் ஆட்டோக்களை இங்கிருந்து எடுத்து செல்ல மாட்டோம் என்று டிரைவர்கள் தெரிவித்தனர். உடனே போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யர்சாமி, சப்– இன்ஸ்பெக்டர் சத்தியன் மற்றும் போலீசார் டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதே இடத்தில் மீண்டும் ஆட்டோக்களை நிறுத்த அனுமதி வழங்குவதாக போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்ற டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களை அங்கிருந்து ஓட்டி சென்றனர். பின்னர் வழக்கம் போல் சாலையோரம் ஆட்டோக்களை நிறுத்தினர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:–
கூடலூர் அக்ரஹார தெரு பகுதியில் இருந்து சக்தி விநாயகர் கோவில், ஸ்டேட் வங்கி வரை தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதியில் 2 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. அங்கு பஸ்களை நிறுத்தும் போது மற்ற வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் தடுப்புச் சுவர் உள்ளதால் ஆஸ்பத்திரி, ரேஷன் கடைகளுக்கு சுற்றி செல்ல வேண்டியது உள்ளது. மேலும் சக்தி விநாயகர் கோவில் தேர்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இது பற்றி கேட்டால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவே தடுப்புச்சுவர் என அதிகாரிகள் கூறுகின்றனர். அப்படி என்றால் சாலையை விரிவுபடுத்தி விட்டு தடுப்புச்சுவர் கட்டலாம். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.