பூ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு


பூ வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 19 Sept 2018 3:30 AM IST (Updated: 19 Sept 2018 5:22 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் பூ வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பத்தூர், 


திருப்பத்தூர் 23-வது வார்டில் உள்ள பாத்திமா நகரை சேர்ந்தவர் ஹனீப்பாட்சா (வயது 39). இவர் திருப்பத்தூர் பகுதியில் பூக்களை மொத்தமாக வாங்கி அவற்றை பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்து வருகிறார். அடிக்கடி பூ வியாபாரம் தொடர்பாக வெளியூருக்கு சென்று விடுவார்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர் பாத்திமாநகர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவாக உள்ள தாயாரை பார்ப்பதற்காக ஹனீப்பாட்சா சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் அவரது மனைவி ஹசீனாபேகம், மகளுடன் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து தெருவில் வசிக்கும் தாயார் வீட்டிற்கு சென்றார். அங்கு இரவு தங்கினார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஹனீப்பாட்சா வீட்டின் இரும்பு கேட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் கதவின் பூட்டையும் உடைத்து பீரோ இருந்த படுக்கை அறைக்குள் சென்றனர்.

அங்கு பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிவிட்டனர். நேற்று காலை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் வினியோகிக்கும் பால்காரர் ஒருவர் சென்றபோது ஹனீப்பாட்சா வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து எதிர்வீட்டில் பால் வாங்கும் பெண்ணிடம் தெரிவித்தார். உடனே அந்த பெண் அவரது உறவினர் மூலம் ஹனீப்பாட்சாவின் மனைவி ஹசீனாபேகத்திற்கு தெரிவிக்கவே அவர் அதிர்ச்சியடைந்து வீட்டுக்கு வந்தார்.

இது குறித்து கணவர் ஹனீப்பாட்சாவுக்கும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர் சென்னையிலிருந்து திருப்பத்தூருக்கு விரைந்தார். இது தொடர்பாக திருப்பத்தூர் டவுன் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த வீட்டுக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் பீரோவில் பதிவான திருடர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.

திருடர்கள் குறித்து துப்பு துலக்க போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. திருட்டு நடந்த பீரோவில் மோப்பம் பிடித்த நாய் வெளியே வேகமாக ஓடி வந்தது. சிறிது தூரம் ஓடி வந்த மோப்பநாய் அதன்பிறகு நின்று விட்டது. எனவே திருடர்கள் தாங்கள் திருடிய நகை, பணத்துடன் அங்கிருந்து வாகனத்தில் தப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஹனீப்பாட்சாவின் வீட்டில் திருடப்பட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என தெரிகிறது.

இந்த நிலையில் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Next Story