ரெயில்வே மேம்பால பணிகளை உடனே தொடங்கக்கோரி 2 அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


ரெயில்வே மேம்பால பணிகளை உடனே தொடங்கக்கோரி 2 அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sep 2018 9:45 PM GMT (Updated: 18 Sep 2018 11:59 PM GMT)

ஆம்பூர் ரெட்டித்தோப்பு ரெயில்வே மேம்பால பணிகளை உடனே தொடங்கக்கோரி 2 அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர், 

வேலூர் மாவட்டத்தில் முக்கிய வர்த்தக நகராக விளங்குவது ஆம்பூர் நகரமாகும். சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த நகரம் அமைந்துள்ளது. மேலும் ரெயில்நிலையமும் இங்கு உள்ளது. இரட்டை ரெயில்பாதையும், தேசிய நெடுஞ்சாலையும் இந்த நகரை 2 பகுதிகளாக பிரிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மின்னல்வேகத்திலும், இரட்டை ரெயில்பாதை வழியாக தினமும் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் அதிவேகத்திலும் சென்று வருகின்றன.

நகரில் ஆம்பூர் ரெட்டித்தோப்பு, கம்பிக்கொல்லை, பெத்லகேம், ஆசனாம்பட்டு ரோடு ஆகிய பகுதிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் மாதனூர் ஒன்றியத்தில் உள்ள நாயக்கனேரி, பனங்காட்டேரி ஆகிய மலை கிராமங்களும் அமைந்துள்ளது.

இங்கு மின்வாரிய அலுவலகம், கல்லூரிகள், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனை, நகராட்சி நடுநிலை பள்ளிகள், போலீஸ் குடியிருப்பு, வர்த்தக நிறுவனங்கள், கோவில்கள், மசூதிகள், சர்ச் ஆகியவை அமைந்துள்ளது. மேலும் ஆனைமடுகு தடுப்பணையும் இங்கு உள்ளது.

இந்த பகுதி பொதுமக்கள் பஸ் நிலையம் மற்றும் நகர பகுதிக்கு செல்ல இரட்டை ரெயில்பாதைகளின்கீழ் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வாகனங்களை பொறுத்தமட்டில் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் மட்டுமே இதன் வழியாக செல்ல முடியும். லாரி, பஸ்கள் செல்ல முடியாது.

அதுவும் இந்த சுரங்கப் பாதைகளில் நிரந்தரமாக கழிவுநீர் தேங்குகிறது. மழைக்காலங்களில் 5 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்குகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத நிலையில் நடந்து செல்பவர்கள் ரெயில்வே தண்டவாளத்தை குறுக்காக கடந்து செல்லும் நிலை உள்ளது. அதுபோன்ற நேரங்களில் பலர் அதிவேகமாக வரும் ரெயிலில் அடிபட்டு இறக்கின்றனர். எனவே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கடந்த 40 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

மேலும் அஸ்லம்பாஷா எம்.எல்.ஏ.வாக இருந்த போது இதுகுறித்து சட்டசபையில் பலமுறை பேசி, முதல்- அமைச்சரிடம் மனு கொடுத்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஆம்பூர் ரெட்டித்தோப்பு பகுதியில் ரூ.30 கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் மட்டும் இதுவரை நடந்ததாக தெரியவில்லை. மேம்பால பணியை தொடங்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் ரெட்டித்தோப்பு பகுதியில் கூட்டுறவு சிறப்பங்காடி திறப்பு விழாவுக்காக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, நிலோபர்கபில் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் விழா முடிந்து திரும்பியபோது அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சர்களின் வாகனத்தை வழிமறித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்வே குகைப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதை சுட்டிக்காட்டிய பொதுமக்கள் மேம்பால பணியை உடனே தொடங்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ, “நான் மதுரைக்காரன், நான் சொன்னால் செய்யாமல் விடமாட்டேன். ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்” என உறுதி அளித்தார். அதைத்தொடர்ந்து போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story