கவர்னர் கிரண்பெடிக்கு, ஆட்டோ தொழிலாளர்கள் கண்டனம்
கவர்னர் கிரண்பெடிக்கு புதுவை ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி,
புதுவை ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க பொதுச்செயலாளர் சேதுசெல்வம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுவை கவர்னர் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக பயணிகள் குறைதீர்க்கும் அட்டையை வெளியிட்டு மக்கள் மீது அக்கறை உள்ளவர்போல் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். புதுவை மாநிலத்தில் ஏராளமான மக்கள் பிரச்சினைகளும், தொழிலாளர் பிரச்சினைகளும் தீர்க்கப்படாமல் உள்ளது. புதுவை போக்குவரத்துத்துறை ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சம் ரூ.35 எனவும், அதனை தொடர்ந்து கி.மீ.க்கு ரூ.18 என கடந்த 2016–ம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது.
அதன்பிறகு பெட்ரோல் விலை பலமுறை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.85–க்கு விற்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.4 ஆயிரமாக இருந்த இன்சூரன்சு கட்டணம் ரூ.8,500 ஆக உள்ளது. இந்தநிலையில் முன்பு நிர்ணயம் செய்த ஆட்டோ கட்டணத்தை தற்போது நடைமுறைப்படுத்த சொல்லுவது நியாயம்தானா? புதுவையில் ஆயிரக்கணக்கான 2 சக்கர மோட்டார் வாகனங்கள் அரசு அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக வாடகை நிலையம் அமைத்து வாடகைக்கு விட்டு வருகிறார்கள். இதன் மீது நடவடிக்கை எடுக்காத கவர்னர் ஆட்டோ கட்டணம் சம்பந்தமாக அறிக்கை விட்டுள்ளார்.
புதுச்சேரியில் அரசு சார்பு நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கணக்கில் சம்பளம் வழங்காமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கவர்னர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று கூறிவரும் கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பெட்ரோல், டீசல், குடிநீர், வீட்டு வரிகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இத்தகைய பிரச்சினைகளை எல்லாம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் வீண் விளம்பரத்துக்காக அவ்வப்போது ஏதாவது அறிக்கையை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சேதுசெல்வம் கூறியுள்ளார்.