‘பாசில் க்யூ மெஷின்’ ஸ்மார்ட் வாட்ச்
கைக்கடிகாரம் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமான நிறுவனம் ‘பாசில்’. வழக்கமான கைக்கடிகாரங்களே இந்நிறுவனத் தயாரிப்பில் மிகவும் பிரபலம்.
பாசில் நிறுவனம் தற்போது பாரம்பரிய வடிவமைப்பில் ஸ்மார்ட் வாட்ச்களை தயாரித்துள்ளது.
பார்ப்பதற்கு வழக்கமான கடிகாரம் போல காட்சியளித்தாலும் இதில் ஸ்மார்ட் வாட்ச்களுக்கான அனைத்து அம்சங்களும் உள்ளன.
45 மி.மீ. சுற்றளவு கொண்ட வட்ட கடிகாரமாக இது வந்துள்ளது. வழக்கமான கைக்கடிகாரத்தில் நேரத்தை சரிசெய்ய உள்ள பட்டனுக்கு இருபுறமும் கிரீடம் வைத்ததுபோல இரண்டு பொத்தான்கள் இதில் உள்ளன.
இதில் உங்களுக்கு எச்சரிக்கை (அலெர்ட்) அளிப்பது, நேரம், தேதி உள்ளிட்டவற்றை காட்டுவது உள்ளிட்ட வழக்கமான பணிகளை இது நிறைவேற்றும்.
இதுதவிர உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும் அம்சங்கள் இதில் உள்ளது. அன்றாடம் நீங்கள் நடக்கும் தூரத்தை இது உணர்த்தும்.
இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேற்புறத்தைக் கொண்டது. ‘பெஸல்’ அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலில் கருப்பு நிறத் தோற்றம் இதற்கு மிகச் சிறந்த தோற்றப் பொலிவை அளிக்கிறது.
இத்துடன் 24 மி.மீ. ஸ்டீல் ஸ்டிராப் மாடலும் நீங்கள் விரும்பினால் தோலினால் ஆன ஸ்டிராப் மாடலையும் வாங்கலாம். ஸ்டிராப் மாற்றுவதும் எளிது. இதனால் ஸ்டிராப் மாற்றுவதற்கு கடைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
இதன் தடிமன் 13 மி.மீ. ஆகும். இது மிகவும் மெல்லிதானது. தங்க நிற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடலும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆண்களின் கம்பீர தோற்றத்துக்கு மெருகேற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கென சிறப்பான வடிவத்திலும் ‘பாஸில் க்யூ மெஷின்’ வந்துள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போனுடன் புளூடூத் மூலம் இதை இணைத்துவிட்டீர்களானால் பிறகு போன் மூலமாகத்தான் இதில் நேரத்தை ‘செட்’ செய்ய முடியும். வழக்கமான கடிகாரத்தைப் போல நேரடியாக இதில் நேரத்தை அட்ஜெஸ்ட் செய்ய முடியாது.
இதில் உள்ள மூன்று பொத்தான்களில் ஒன்று கேமராவுக்கானது. அதேபோல இசை கேட்கவும், நிறுத்தவும் இதை பயன்படுத்தலாம். ஸ்டாப் வாட்சை செயல்படுத்தவும் இதை பயன்படுத்தலாம். இதில் பேட்டரியை மாற்றுவது எளிது. பேட்டரியின் விலையும் குறைவானதே.
நீங்கள் அருந்தும் நீரின் அளவு, அலாரம் ஓசை அளவை கட்டுப்படுத்துவது போன்றவற்றையும் இதன் மூலம் செயல்படுத்தலாம்.
நீங்கள் தூங்கும்போதும் இதை அணிந்து கொள்ளலாம். நீங்கள் எவ்வளவு நேரம் தூங்கினீர்கள், அதில் எவ்வளவு நேரம் ஆழ்ந்த உறக்கம் கொண்டீர்கள் என்ற விவரங்களை இது அளிக்கும்.
ஸ்மார்ட் வாட்ச் போன்ற தோற்றத்தை விரும்பாத அதே சமயம் ஸ்மார்ட் வாட்ச் அளிக்கும் பிட்னெஸ் தகவல்களை விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ளது. விலை ரூ. 13,495.
Related Tags :
Next Story