கைதிகளுக்கு சிறப்பு வசதியா? பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை 2 இரும்பு கம்பிகள் பறிமுதல்


கைதிகளுக்கு சிறப்பு வசதியா? பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை  2 இரும்பு கம்பிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Sep 2018 10:00 PM GMT (Updated: 19 Sep 2018 12:37 PM GMT)

கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

நெல்லை, 

கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 2 இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சொகுசு வாழ்க்கை

சென்னை அருகே உள்ள புழல் சிறையில் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக புகைப்படங்கள் சமீபத்தில் அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து 5 கைதிகள் திருச்சி, சேலம் கோவை உள்ளிட்ட சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். அதேபோல் தலைமை வார்டர்கள் உள்பட 8 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அதிரடி நடடிக்கையாக விசாரணை சிறையில் இருந்து மேலும் 7 வார்டர்கள் நேற்றுமுன்தினம் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். இதற்கிடையே, புழல் சிறையை போன்று கைதிகளுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் சோதனை நடத்த சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அசுதோஷ்சுக்லா உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய சிறைகளில் போலீசாரும், ஜெயில் அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிரடி சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் தண்டனை கைதிகள் 649 பேரும், விசாரணை கைதிகள் 503 பேரும், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 54 பேரும், ஒரு தூக்குத்தண்டனை கைதியும், முதல் வகுப்பில் அடைக்கப்பட்டுள்ள 4 கைதிகளும் சேர்த்து மொத்தம் 1,212 கைதிகள் உள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் உத்தரவின்பேரில் துணை கமி‌ஷனர் சுகுணாசிங் மேற்பார்வையில் பாளையங்கோட்டை உதவி போலீஸ் கமி‌ஷனர் விஜகுமார் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 8 சப்–இன்ஸ்பெக்டர்கள், 10 போலீஸ் ஏட்டுகள், 50 ஆயுதப்படை போலீசார் என மொத்தம் 73 பேர் நேற்று காலை 5.45 மணிக்கு பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வந்தனர். அவர்கள் 5 பிரிவுகளாக பிரிந்து சென்று சரியாக காலை 6 மணிக்கு கைதிகளை அறையில் இருந்து திறந்து விட்டதும் கைதிகளிடமும், அவர்கள் தங்கிருந்த அறைகளிலும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

2 இரும்பு கம்பிகள் பறிமுதல்

இதையடுத்து சிறை வளாகம், சிறையின் உள் வளாகம், கழிப்பறை, குளியலறை, மைதானம், சினிமா பார்க்கும் கூட்ட அரங்கு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினார்கள். மேலும் கைதிகள் அறைகளில் அவர்களுக்கு விதிமுறைகளை மீறி ஏதேனும் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என்றும் பார்வையிட்டனர்.

இந்த சோதனையின்போது சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் சிறை காவலர்கள் போலீசாரை சிறையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு அழைத்து சென்றனர். காலை 7.30 மணி வரை இந்த சோதனை நடந்தது. அப்போது குளியலறை அருகில் 2 இரும்பு கம்பிகளும், 2 அலுமினிய தகடுகளும் கிடந்தன. இதை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதவிர அங்கு தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் சிக்கவில்லை.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் சோதனை நடத்தியதையொட்டி அந்த சிறையின் முன்பகுதி, வெளிப்புற சுற்றுபகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story