கோவில்பட்டியில் பரிதாபம் தனியார் விடுதியில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
கோவில்பட்டியில் தனியார் விடுதி அறையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் தனியார் விடுதி அறையில் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெராக்ஸ் கடை உரிமையாளர்தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஆயிரராமன். இவருடைய மகன் காளிதாஸ் (வயது 32). இவர் கோவில்பட்டி– எட்டயபுரம் ரோடு, புது ரோடு சந்திப்பு பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த 13–ந்தேதி கோவைக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிச் சென்றுள்ளார். பின்னர் அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வாடகை அறை எடுத்து தங்கினார்.
நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் அவர் விடுதி அறையில் இருந்து வெளியே வரவில்லை. எனவே அந்த அறையின் ஜன்னல் வழியாக விடுதி ஊழியர்கள் பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் விடுதி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணை
இதன்பேரில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு விடுதியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ், சப்–இன்ஸ்பெக்டர் அரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ விடுதிக்கு விரைந்து சென்றனர். விடுதி கதவை உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கி கொண்டு இருந்த காளிதாசின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய உடலை பார்த்து மனைவி, குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதல்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு தீபா (27) என்ற மனைவியும், ரித்திகா (4) என்ற மகளும் உள்ளனர்.