ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவிலுள்ள நீதிபதியை மாற்ற வேண்டும்


ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த  குழுவிலுள்ள நீதிபதியை மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 20 Sept 2018 2:30 AM IST (Updated: 19 Sept 2018 7:59 PM IST)
t-max-icont-min-icon

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவில் இடம் பெற்றுள்ள ஓய்வு பெற்ற நீதிபதியை மாற்ற வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவில் இடம் பெற்றுள்ள ஓய்வு பெற்ற நீதிபதியை மாற்ற வேண்டும் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தை சேர்ந்த பாத்திமா பாபு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்துக்கு ஒரு நோட்டீசு அனுப்பி உள்ளோம். அந்த நோட்டீசில், ஸ்டெர்லைட் உரிமையாளர்கள் மீது மோசடி மற்றும் விதிமீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், இதுவரை அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நாங்கள் அனுப்பிய நோட்டீசு தொடர்பாக 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அரசியல் சாசனத்தின் படி, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கை நாங்கள் நேரடியாக எடுத்து நடத்துவோம். இதற்காக நாங்கள் காத்து இருக்கிறோம்.

கழிவுகள்

ஸ்டெர்லைட் நிறுவனத்தில் 172.7 எக்டர் நிலம் இருக்க வேண்டும். ஆனால், 2018–ம் ஆண்டு அறிக்கையின்படி 102.08 எக்டர் நிலம் மட்டுமே உள்ளது. அதே போன்று ஆபத்தான கழிவுகளை கையாளும் விதிமுறைகள் 2008, 2016–ன் கீழ் அனுமதி பெறாமலேயே கழிவுகளை வெளியேற்றி வந்து உள்ளார்கள். 2016–17–ம் ஆண்டு 15 ஆயிரம் டன் ஆர்சனிக் கலந்த கழிவுகளை வெளியேற்றி உள்ளனர். சட்டப்படி இந்த கழிவுகளை குழிதோண்டி புதைத்து இருக்க வேண்டும். ஆனால் ஆலை நிர்வாகம் முன்பின் தெரியாதவர்களுக்கு விற்பனை செய்து உள்ளது.

இந்த தகவல்களை கைவசம் வைத்துக் கொண்டு எதற்காக மாசுகட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் அமைச்சகம் தெளிவான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்து உள்ளது. இதனால் நாங்கள் கடந்த 11–ந் தேதி நோட்டீசு அனுப்பி உள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஆவணங்கள் அனைத்தும் எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

மாற்ற வேண்டும்

தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் கமிட்டி அமைத்து உள்ளது. அந்த நீதிபதியின் பெயர் பல பிரச்சினைகளில் சிக்கி உள்ளது.

இந்த நீதிபதி தலைமையில் நடக்கும் ஆய்வை முழுமனதோடு எங்களால் ஏற்க முடியவில்லை. இதுவரை எந்தவித பிரச்சினைகளிலும் சிக்காத நீதிபதியை நியமிக்க வேண்டும். மாநில அரசு அரசாணை போட்டு மூடி கிடக்கும் ஆலையை, ஏதோ ஒரு விதத்தில் நியாயப்படுத்தி மீண்டும் திறப்பதற்கான முயற்சி ஏற்பட்டு விடக்கூடாது. ஆனாலும் ஆய்வுக்குழு வந்தால் அவர்களை சந்தித்து எங்கள் நியாயங்களை முன்னெடுத்து வைப்போம்.

மாநில அரசு ஆலையை மூட வலுவான காரணங்கள் இருந்த போதும் அதனை கையில் எடுக்காமல், ஆலை சரி செய்யக்கூடிய சில காரணங்களை கூறி அரசாணை பிறப்பித்து இருப்பது அச்சத்துக்கு உரியது. தற்போது சட்டப்போராட்டம் நடக்கிறது. ஆலை திறந்தால் நிலைமை மாறும். தற்போது நீதிபதி தலைமையில் குழு வந்தால், எங்கள் எதிர்ப்பு கருத்தையும் வெளிப்படுத்துவோம். எங்கள் கருத்தை எப்படி வெளிப்படுத்துவது என்பதை மக்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story