மதுவிற்கு எதிராக தந்தையுடன் வக்கீல் நந்தினி பிரசாரம்: பா.ஜ.க.வினர் தடுத்ததால் பரபரப்பு


மதுவிற்கு எதிராக தந்தையுடன் வக்கீல் நந்தினி பிரசாரம்: பா.ஜ.க.வினர் தடுத்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Sep 2018 11:45 PM GMT (Updated: 19 Sep 2018 7:33 PM GMT)

காரைக்குடியில் மதுவிற்கு எதிராக பிரசாரம் செய்த வக்கீல் நந்தினி மற்றும் அவரது தந்தையை பா.ஜ.க.வினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்குடி,

மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர், வக்கீல் நந்தினி. இவர் நேற்று தனது தந்தை ஆனந்தனுடன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூருக்கு வந்தார். அங்கு மதுவுக்கு எதிராக மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். அதன்பின்னர் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவர்களுக்கு அவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதன்பின்னர் காரைக்குடியில் உள்ள அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவ–மாணவிகளுக்கு மதுவிற்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

பின்னர் அங்கிருந்து வக்கீல் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆகியோர் மோட்டார் சைக்கிளில் காரைக்குடி அண்ணாசிலை மற்றும் கல்லுக்கட்டி பகுதியில் உள்ள மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க.வினர் 20–க்கும் மேற்பட்டோர் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் கையில் இருந்து விளம்பர பதாகைகளை பறித்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் பிரசாரத்தை தடுத்து நிறுத்திய பா.ஜ.கவினர், அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பா.ஜ.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து பிரசாரத்தை தடுத்த பா.ஜ.க.வினரை கைதுசெய்ய வலியுறுத்தி வக்கீல் நந்தினி தனது தந்தையுடன் காரைக்குடி அண்ணா சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறும்போது, மதுவினால் வீட்டிற்கும், நாட்டிற்கும் ஏற்படும் தீமைகள் குறித்து நானும், எனது தந்தையும் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். இந்த பிரச்சாரத்தை நாங்கள் மதுரையில் தொடங்கிய பின்னர் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ளோம். நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மக்களிடையே எடுத்துக் கூறினால் எங்களை தேச விரோதிகளாக பார்க்கின்றனர். ஏற்கனவே இதுபோன்று பிரசாரம் செய்த எங்களுக்கு பா.ஜ.க.வினர் பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர். எனவே எங்களை பிரசாரம் செய்யாமல் தடுத்து, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை நாங்கள் எங்களது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றார்.

இதற்கிடையில் நந்தினிக்கு ஆதரவாக காரைக்குடியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர், மக்கள் மன்றம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் பிரதமர் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக பா.ஜ.க.வி.வினர் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.


Next Story