சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த மழைநீர் வடிகால் தோண்டி சீரமைப்பு
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் 25 ஆண்டுகளாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த மழைநீர் வடிகால்களை இந்தொ–திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் தோண்டி சீரமைத்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை நகருக்கு பெருமை சேர்க்கும் ஊருணிகளில் செட்டிஊருணியும் ஒன்று. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு நகருக்கு குடிநீர் ஆதாராமாக விளங்கியது, செட்டி ஊருணி. சிவகங்கை நகர் குடிநீருக்கு வைகை குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கியதால் காலப்போக்கில் இதன் பயன்பாடு குறைந்துவிட்டது. இந்த செட்டிஊருணிக்கு தண்ணீர் வரத்து பகுதியாக தற்போது கலெக்டர் அலுவலக வளாகம் அமைந்துள்ள இடம் இருந்தது. இதனால் இந்த இடத்தில் கடந்த 1985–ம் ஆண்டு கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டும்போது செட்டி ஊருணிக்கு மழைநீர் செல்லும் வகையில் 2 அடி ஆழத்தில் வடிகால்கள் அமைக்கப்பட்டன. இந்த கால்வாய்களை முழுமையாக பராமரிக்காமல் அப்படியே விட்டதால் மண்ணுக்குள் புதைந்துபோனது. மேலும் மழைநீர் ஊருணிக்கு செல்லாமல் தடை ஏற்பட்டது.
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க தொடங்க உள்ளதால் நீர்நிலைகளின் வரத்துக்கால்களை சீரமைக்க மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். அப்போது சிவகங்கை நகர மக்களின் சார்பில் செட்டிஊருணிக்கு மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதனைத்தொடர்ந்து கலெக்டர் ஏற்பாட்டில் இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த சுமார்400 வீரர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மண்ணுக்குள் புதைந்து கிடந்த மழைநீர் வடிகால்களை சீரமைத்தனர்.
முன்னதாக திட்ட இயக்குனர் வடிவேல், துணை கமாண்டர் முகமது சமீம், உதவி கமாண்டர் ரவி பிரகாஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரங்கசாமி, தாசில்தார் ராஜா ஆகியோரும் சீரமைப்பு பணியை செய்தனர். இப்பணிகளை கலெக்டர் ஜெயகாந்தன், இந்தோ–திபெத் எல்லை பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. ஆஸ்டின் ஈபன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.