பஸ் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி 5 பேர் படுகாயம்


பஸ் மீது கார் மோதல்; கல்லூரி மாணவர் பலி 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Sept 2018 3:15 AM IST (Updated: 20 Sept 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

விக்கிரவாண்டி, 

தெலுங்கானா மாநிலம் ஹாஜிப்பூர் பகுதியை சேர்ந்தவர் கட்டம்ராகுல் (வயது 22). இவர் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் அதே கல்லூரியில் படிக்கும் தனது நண்பர்களான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த விஷ்ணுசோவர்த்தன்ரெட்டி (22), தேவசாய் (23), புத்திவம்சி (21) உள்பட 5 பேருடன் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் கட்டம்ராகுல் தனது நண்பர்களுடன் சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டார். காரை புத்திவம்சி ஓட்டினார். அந்த கார் நேற்று அதிகாலை விக்கிரவாண்டியை அடுத்த ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்னை- திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது காருக்கு முன்னால் திட்டக்குடி நோக்கி ஒரு அரசு பஸ் சென்றுகொண்டிருந்தது. திடீரென அந்த பஸ்சின் பின்புறம் கார் மோதியது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் கட்டம்ராகுல் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். தேவசாய், புத்திவம்சி உள்பட 5 பேர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் பலியான கட்டம்ராகுலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story